வரதட்சணை இல்லாமல் ‘டும் டும் டும்

ஊட்டி : கோத்தரின மக்களின் “வரதட்சணை இல்லாத’ திருமணம், நீலகிரி மாவட்டத்தில் தனித்துவம் பெற்றுள்ளது. நீலகிரியில் வசிக்கும் ஆதிவாசி மக்களில், குறைந்த எண்ணிக்கை கொண்டவர்கள் கோத்தரின மக்கள்; கோக்கால், திருச்சிகடி, கோத்தகிரி, கொல்லிமலை, கூடலூர், குந்தா கோத்தகிரி, கீழ் கோத்தகிரி பகுதிகளில் வசிக்கின்றனர். கைவினைக் கலைஞர்களான கோத்தர்களின் திருமணத்தில், வரதட்சணை இல்லாதது குறிப்பிடத்தக்கது.

மாப்பிள்ளை மற்றும் பெண்ணிடம் சம்மதம் பெற்ற பின், திருமணப் பேச்சு துவங்குகிறது; இருவரில் யாருக்காவது சம்மதம் இல்லையென்றால், உடனடியாக திருமணம் ரத்து செய்யப்படும். சம்மதம் பெற்ற பின், பாரம்பரிய முறைப்படி, மணமகனுக்கு “முண்டு முற்சி’ எனப்படும் வெள்ளை நிற துண்டு அணிவித்து நிச்சயிக்கப்படுகிறது. அமாவாசை முடிந்து வளர்பிறையில் திருமணம் நடத்தப்படுகிறது.

திருமணத்துக்கு முன், மணமகன் வீட்டார் பெண் வீட்டுக்கு சென்று, மணமகளிடம் மீண்டும் சம்மதம் கேட்பர். பெண் சம்மதித்ததும், பெண்ணிடம் மணமகன் 1.25 ரூபாய் பணம் கொடுத்து திருமணம் செய்து கொள்வார். மணமகன், பெண் வீட்டு முதியவரின் காலில் விழுந்தும், மணமக்கள், தங்கள் வீட்டு பெரியோரிடம் ஆசி பெறுவர்.

இரு வீட்டில் இருக்கும் முதியோர், தண்ணீர் எடுத்து மணமக்கள் தலையை தொட்டு அவர்கள் பருக அளித்து, வாழ்த்து தெரிவிப்பர். மணமகளின் கழுத்தில், கறுப்பு நிற மணியை மாமியார் கட்டிய பின், திருமணம் நிறைவடையும். சோலூர் அருகேயுள்ள கோக்கால் கிராமத்தில் வசிக்கும் மயிலன், விசாலாட்சிக்கு நேற்று திருமணம் நடந்தது. நீலகிரியில் வசிக்கும் கோத்தரின மக்கள் திரண்டு, மணமக்களை வாழ்த்தினர். இவர்களின் திருமண நடைமுறை, பலரை வியப்படையச் செய்துள்ளது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.