சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்குவதில் தீவிரம் காட்டும் ஐ.பி.எம்

புதுடில்லி ; சுமார் ரூ.7,800 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டு,வழக்கில் சிக்கி சீரழிந்து போயிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க பல நிறுவனங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வருகின்றன.

இப்போது அமெரிக்காவின் பிரபல ஐ.டி.நிறுவனமான ஐ.பி.எம்., இதில் முன்னணியில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. சத்யம் கம்ப்யூட்டர்ஸின் பெரும்பான்மை பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து அது, மத்திய அரசு நியமித்திருக்கும் சத்யம் போர்டில் பேசியிருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் வக்கீல்களை ஐ.பி.எம்.,வரவழைத்து ஐதராபாத்துக்கு அனுப்பியிருக்கிறது. அவர்கள் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வர்த்தக அளவு, வருமானம், இதை வாங்குவதால் சந்திக்க வேண்டிய சிரமங்கள் போன்றவற்றை ஆராய்ந்து, எவ்வளவு தொகைக்கு இதனை வாங்கலாம் என்று ஐ.பி.எம்.,க்கு ஆலோசனை வழங்குவார்கள். ஏற்கனவே சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலரிடம் ஐ.பி.எம்., நிறுவன அதிகாரிகள் இது குறித்து கலந்தாலோசித்ததாகவும் தெரிகிறது. ஐ.பி.எம்., நிறுவனத்தை போலவே, எல் அண்ட் டி ( இதற்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸில் 12 சதவீத பங்குகள் இருக்கின்றன ), பி.கே.மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் குரூப் ஆகிய நிறுவனங்களும் சத்யத்தை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.