உதயன்” ஆசிரியர் கைதான முறை குறித்து ஐ.தே.கட்சியின் எம்.பி. சபையில் காட்டம்: ஊடக அமைச்சரின் கருத்துக்கும் கண்டனம்

இலங்கையில் ஊடகங்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கியத் தேசியக் கட்சியின் எம்.பியான தயாசிறி ஜயசேகர, அந்த அடக்குமுறைகளின் ஒரு பகுதியாக “சுடர் ஒளி”, “உதயன்” ஆசிரியர் வித்தியாதரன் கைது செய்யப்பட்ட முறை குறித்து தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“சுடர் ஒளி”, “உதயன்” ஆசிரியர் வித்தியாதரன் கடத்தப்பட்டார் என்று முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என்று அரசு அறிவித்தது.

கைது செய்வது இப்படித்தானா? ஒருவரைக் கைது செய்வதென்றால் அதற்கு ஒழுங்குமுறை இருக்கிறது. கைது செய்ய வருபவர்கள் முதலில் தம்மை அடையாளம் காட்டி, கைது செய்வதற்கான காரணத்தையும் கூறவேண்டும். ஆனால் வெள்ளை வானில் சென்று கடத்தல் பாணியில் இழுத்துச் சென்று விட்டு, பின்னர் கைது என்று கூறுவது ஏற்க முடியாதது.

வித்தியாதரனுக்கு புலிகளுடன் தொடர்பு இருந்தால் அது குறித்து உரியமுறையில் விசாரிக்கலாம். ஆனால் அதற்காக சட்டத்துக்கு மாறாக அவரைக் கைது செய்து இழுத்துச் செல்வது முறையல்ல. அரசு காட்டுச்சட்டம் நடத்துகின்றது போலிருக்கிறது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க வேண்டிய ஊடகத்துறை அமைச்சரே வித்தியாதரன் கைது செய்யப்பட்ட முறையை நியாயப்படுத்தியுள்ளார். இதன் மூலம், வெள்ளை வான் சம்பவங்களை அரசு ஏற்றுக்கொள்கின்றது என்ற கருத்து வெளிப்படையாகின்றது என்று தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.