வடக்கு மக்களின் நிலமை பரிதாபகரமாக மாறி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கின் மனிதாபிமான நிலவரங்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பேச்சாளர் கோர்டன் வைஸ் இன்று புதன்கிழமை கவலை வெளியிட்டுள்ளார்.

70 , 000 தொடக்கம் 200, 000 வரையான பொதுமக்கள், மிகவும் குறுகிய பிரதேசத்திற்குள் உணவோ, தங்குமிடமோ, சுத்தமான குடிநீரோ அற்ற நிலையில் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பொதுமக்கள் மனிதாபிமான உதவிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு இணையத்தளம் ஒன்றுடனான தொலைபேசி வழி செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்து வெளியிடும் போது,

இவ்வாறு முடக்கி வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எவ்விதமான மனிதாபிமான உதவிகளும் கிடைக்கப்பெறுவதற்கில்லை. அவர்கள் அங்கு தங்குவதற்கு தேவையான எதுவும் அந்த மக்களுக்கு இல்லை.

மிகவும் குறுகிய பிரதேசத்தில் அடைப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான உணவோ நீரோ போதுமானதாக இல்லை. மருத்துவ வசதிகளும் இல்லை. நாங்களும் கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு அவர்களுக்கான மருத்து வழங்களை மேற்கொள்ளவில்லை. அவர்களுக்கு சீரற்ற முறையிலான உணவு விநியோகமே நிலவுகிறது.

இந்த நிலையில் பொதுமக்களை பாதுகாப்பான பிரதேசங்களுக்கு செல்ல உரிய தரப்புகள் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், மனிதாபிமான நடவடிக்கையாளர்களால் அவர்களுக்கு அர்த்த புஷ்டியான உதவிகளை வழங்க முடியும்.

இதேவேளை இலங்கை அரசாங்க இராணுவத்தினாலும் விடுதலைப் புலிகளினாலும் அங்கு பாரிய அளவில் மனிதாபிமான சட்டத்திட்டங்கள் மீறப்படுகின்றன. இரண்டு தரப்பினரும் தமது வன்முறைகளை கைவிடவேண்டும். எனவும் கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.