தமிழின அழிப்புக்கு அமெரிக்கா துணை போகக்கூடாது: அமெரிக்காவின் ‘பேர்ள்’ அமைப்பு வேண்டுகோள்

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் வாழும் 200,000 மக்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. இது சிறிலங்கா அரசின் இன அழிப்புக்கு துணை போவதாகும் என பேர்ள் (PEARL) எனப்படும் வொசிங்ரனை தளமாகக் கொண்ட சிறிலங்காவுக்கான அரச சார்பற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

‘பேர்ள்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் வாழும் 200,000 மக்களை அங்கிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. இந்த மக்களை போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசிடம் ஒப்படைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சிறிலங்கா அரசினால் நடத்தப்படும் வதை முகாம்களில் அல்லது தடைமுகாம்களில் இந்த மக்கள் அடைக்கப்படலாம். பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் இவர்களை வெளியேற்றுவது அந்த மக்கள் தமது மரணத்தை தாமே தேடிக்கொள்வதற்கு ஒப்பானது.

இன அழிப்பை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்த மக்களின் மீது கடந்த சில மாதங்களாக சிறிலங்கா அரசு குண்டு வீச்சுக்களை நடத்தி வருகின்றது.

எனவே, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி சிறிலங்கா அரசிடம் ஒப்படைப்பது சிறிலங்கா அரசின் இன அழிப்புக்கு துணை போவதாகும்.

வன்னி மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதை விடுத்து அவர்கள் வாழும் பாதுகாப்பான பிரதேசங்களின் எல்லைகளை அதிகரித்து பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை கண்காணிப்பாளர்களை அப்பகுதிக்கு அனுப்புவதை அமெரிக்க அரசு மேற்கொள்ள வேண்டும்.

போர் நிறுத்தம் ஒன்று மேற்கொள்ளப்படுவதற்கான அழுத்தங்களையும் அமெரிக்கா சிறிலங்கா அரசின் மீது மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.