கார்கள்- பைக்குகள் விற்பனை அதிகரிப்பு

கடந்த மாதம் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

விலை குறைப்பு மற்றும் வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதன் விளைவாக வி்ற்பனை அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பரில் வாகனங்கள் மீதான எக்சைஸ் வரி நான்கு சதவீதம் வரை குறைக்கப்பட்டது. இதனால் வாகனங்களின் விலையை நிறுவனங்கள் குறைத்தன.

இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஒரு சதவீத வட்டியை குறைத்தது. இதனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் வாகன வட்டியை குறைத்து 10 சதவீதமாக்கியது. 14.5 முதல் 15 சதவீதம் வரை வட்டி வசூலித்த யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கார்பரேஷன் பாங்க், பாங்க் ஆப் பரோடா போன்றவை வட்டியை 11.5 முதல் 12 சதவீதமாக குறைத்துள்ளன.

ஆறாவது ஊதிய கமிஷன் பரிந்துரையால் அரசு ஊழியர்களும் அதிக அளவில் கார் வாங்கியுள்ளனர். வழக்கமாக மாருதி நிறுவனத்தின் கார்களை வாங்குவதில் இவர்களது பங்குகள் 3.5 சதவீதம் தான் இருக்கும். ஆனால், கடந்த மாதம் அவர்களது பஙகு 8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி கடந்த மாதத்தில் மட்டும் 70,625 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் நடந்த விற்பனையை விட 19.1 சதவீதம் அதிகமாகும்.

ஹூன்டாய் நிறுவனத்தின் கடந்த மாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் இந்நிறுவனம் 21,215 கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு விற்பனையை விட 45.3 சதவீதம் கூடுதலாகும்.

இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி 18.3 சதவீதம் உயர்ந்துள்ளது. இம்மாதம் 17,039 கார் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல இரு சக்கர வாகனங்கள் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

ஆனால், ஆட்டோமொபைல் வர்த்தகத்தில் பெரும் பஙகு கொண்ட சரக்கு வாகனங்கள் மற்றும் பஸ்களின் விற்பனை தொடர்ந்து சிக்கலில் தான் உள்ளது.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.