இலங்கை: தமிழ் சிறுமி கற்பழிப்பு-தாய் படுகொலை

மட்டக்களப்பு: மட்டக்களப்பில் ராணுவ கமாண்டோக்களால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்ட 14 வயது சிறுமியின் தாயாரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்று விட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளவெளி என்ற பகுதியில்,
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, ராணுவத்தின் கமாண்டோப் படையினர் தேடுதல் வேட்டையி்ல் ஈடுபடுவதாக கூறி வீடு வீடாக சென்றனர்.

அங்கிருந்த ஆண்கள் அனைவரையும், அருகில் உள்ள கோவிலுக்குப் போகுமாறு துப்பாக்கி முனையில் உத்தரவிட்டனர்.

பின்னர் பெண்கள் அனைவரையும் ஒரே இடத்தில் குழுமச் செய்து அவர்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டனர்.

அப்போது 14 வயது சிறுமியை, அவரது தாய் முன்பாகவே கொடூரமாக கற்பழித்தனர். இதை தடுக்க சிலர் முயன்றபோது அவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டி விட்டனர்.

மிகக் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட அந்த சிறுமி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினர்.

இதுகுறித்து மட்டக்களப்பு போலீஸார் கண் துடைப்பு விசாரணையை மேற்கொண்டனர். மேலும், விசாரணை என்ற பெயரில் அந்த சிறுமியை பல மணி நேரம் விசாரித்து மேலும் சித்திரவதை செய்துள்ளனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு அந்த சிறுமியின் வீட்டுக்கு மீண்டும் கமாண்டோப் படையினர் வந்தனர். புகார் கூறுகிறீர்களா என்று கேட்டு சிறுமியின் தந்தையை சரமாரியாக தாக்கினர். பின்னர் சிறுமியின் தாயையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் சுட்டுக் கொன்றனர்.

அதன் பின்னர் அவரது உடலை கிணற்றில் போட்டு விட்டுப் போய் விட்டனர். தன் கண் முன்பாகவே மனைவியை கமாண்டோ வீரர்கள் அடித்துக் கொன்றதைப் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறியபடி இருந்தால் அந்த அப்பாவித் தமிழர்.

பின்னர் வந்த வெள்ளவெளி போலீஸார், அந்தப் பெண்மணியின் உடலை மீட்டு களுவாங்கன்சிக்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைவிட்ட பிள்ளையான்:

முன்னதாக தனது மகளை கொடூரமாகக் கற்பழித்த ராணுவத்தினர் மீது கிழக்கு மாகாண முதல்வரான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானிடம் புகார் கூறியிருந்தார் அந்தப் பெண்மணி.

ஆனால், பாதுகாப்பு விவகாரம் குறித்து நான் நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் இல்லை. நீங்கள் கருணாவை அணுகுங்கள் என்று அவர் கூறி விட்டாராம்.

சிறுமியை தாய் முன்பாகவே கொடூரமாக கற்பழித்ததோடு நில்லாமல், அவரது தாயையும் மிகக் கொடூரமாகக் கொன்ற ராணுவத்தின் செயலால் வெள்ளவெளி தமிழர்கள் பயங்கர அதிர்ச்சியிலும், பீதியிலும் உள்ளனர்.

அதைவிடக் கொடுமையாக முதல்வராக உள்ள பிள்ளையான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று கருணாவை கையைக் காட்டி விட்டதும் தமிழர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையில் குண்டுவீச்சு-57 தமிழர்கள் பலி:

இதற்கிடையே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள புதுமாத்தனன் என்ற கிராமம் பாதுகாப்பு பகுதியாக ராணுவத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நம்பி ஏராளமான தமிழர்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளனர்.

இங்குள்ள சிறிய மருத்துவமனையில் போரில் காயமடைந்த ஏராளமான தமிழர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை மீது இலங்கை ராணுவம் திடீரென பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் 57 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 104 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அதேபோல புதுக்குடியிருப்பு அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம் ஆகிய பகுதிகளிலும் பீரங்கி தாக்குதல் நடந்தது.

இதற்கிடையே ஆணையிறவு அருகே ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வெற்றிலைசேரி பகுதிக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தற்கொலை படையை சேர்ந்த பெண் புலி ஒருவரும் மனித குண்டு தாக்குதல் நடத்தினார். இதில் பல ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.