அரசியலைவிட்டு கருணாநிதி விலகுவதே நல்லது-ஜெ

சென்னை: அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வது தான் கருணாநிதிக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 19ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கியது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச் செயல்.

இதே போன்று திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் தான் ஜாலியன்வாலா பாக் படுகொலை. ஆனால், கருணாநிதியால் குறிப்பிடப்படும் மகாமகம் சம்பவம் (ஜெயலலிதாவும், சசிகலாவும் குளத்தில் புனித நீராடியபோது ஏற்பட்ட நெரிசலில் பலர் பலியானது) தற்செயலாக நடைபெற்ற ஒரு விபத்து.

உச்ச நீதிமன்றம் கருணாநிதியை பதில் அளிக்கச் சொல்லவில்லை, காவல் துறையைத்தான் பதில் அளிக்கச் சொன்னது என்று தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இது போன்ற அறிக்கையைப் பார்க்கும் போது, காவல் துறைக்கு பொறுப்பு வகிப்பவர் கருணாநிதியா அல்லது வேறு யாராவதா என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

நான் ஏதோ உயர்ந்த அமைப்புகளை விமர்சித்து இருப்பதாகக் கூறியிருக்கிறார். இதிலிருந்து கருணாநிதி என்னுடைய அறிக்கையை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

நான் என்னுடைய அறிக்கையில் `கருணாநிதி நினைக்கும் இடத்தில் சென்று முறையிடுவது’ என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தேன். தன்னுடைய சமீபத்திய `திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா’ என்ற நாடகத்தின் மூலம் எப்படி முறையற்ற இடத்தில் கடிதங்களை கொடுப்பது என்பதை நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் தான் கருணாநிதி. நான் எந்த உயரிய அமைப்பையும் விமர்சிக்கவில்லை.

முதுகுத் தண்டுவடத்தில் நடந்த அபாயகரமான அறுவை சிகிச்சைக்குப் பின்பும், அதில் தான் புத்துயிர் பெற்றுள்ளது பற்றியும் துளி இரக்கமும் இல்லாமல் நான் கேலி செய்திருப்பதாக கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

19ம் தேதி நடைபெற்ற காவல் துறையினரின் வன்முறை வெறியாட்ட சம்பவத்தில், தேவையில்லாமல் என் மீதும், அதிமுக மீதும் வீண்பழி சுமத்தியதால் தான் நான் அதற்கு பதிலடி கொடுத்தேன். கருணாநிதியை கேலி செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

கருணாநிதியின் அறிக்கைகளுக்கு எல்லாம் பதில் அளிக்காமல் மெளனம் காக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா என்று தெரியவில்லை!.

அதிமுக என்பது மிகப்பெரிய அரசியல் கட்சி. எனவே, கருணாநிதி அரசியல்ரீதியாக அறிக்கை கொடுத்தால் அதற்கு தக்க பதில் கொடுப்பது தான் ஜனநாயகக் கடமை.

தற்போது நீதிமன்றப் பணிகள் முடங்கியிருப்பதால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும், சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கை சீராக்கவும் நடவடிக்கை எடுக்காமல், என்னையும், அதிமுகவையும் சதா சர்வகாலமும் குறை கூறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பது கருணாநிதியின் இயலாமையையே காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில், அரசியலில் இருந்து நிரந்தர ஓய்வு எடுத்துக் கொள்வது தான் கருணாநிதிக்கும் நல்லது, தமிழக மக்களுக்கும் நல்லது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Source & Thanks : thatstamil.com

Leave a Reply

Your email address will not be published.