நோர்வேயில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்

வன்னிப் பிரதேசத்திற்குள் வாழும் மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உடனடியாக அவர்கள் வாழும் பகுதிக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலைய வளாகத்தில் இருந்து நாளை மறுநாள் வியாழக்கிழமை மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை Karl Johans gata ஊடாக Nasjonalteateret பகுதி வரை மனித சங்கிலியாக மக்கள் அணிதிரளும் போராட்டமாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இப்போராட்டம் தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

சிங்களப் பேரினவாத்தின் இன அழிப்புப் போரினால், உணவின்றி, மருந்தின்றி, குடிநீர் கூட இன்றி, வார்த்தைகளால் எடுத்துரைக்க முடியாத ஒரு பெரும் மனித அவலத்திற்குள், மரணக்களத்திற்குள் வாழ எமது உறவுகள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

பசியினாலும், நோய்க்கும் காயங்களுக்கும் மருந்தின்றியும் உயிரிழக்கின்ற பேரவலம் எமது உயர்வுகளைச் சூழ்ந்துள்ளது.

தமிழின அழிப்பிற்கு எறிகணைகள், குண்டு வீச்சுக்கள் மட்டுமல்ல. உணவு, மருந்து, குடிநீரைக் கூட பௌத்த சிங்கள பேரினவாதம் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது.

இதற்கு அனைத்துலகம் அங்கீகாரம் வழங்குகின்றதா?

– எமது உறவுகளை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி, வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவதை, இன அழிப்பு அரசின் கைகளில் ஒப்படைக்கப்படுவதனை அனுமதிக்க மாட்டோம்

– வன்னிப் பிரதேசத்திற்குள் வாழும் மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்கள் உடனடியாக அவர்கள் வாழும் பகுதிக்கு அனுப்பப்பட வேண்டும்.

என்பதை வலியுறுத்தி இந்த மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

நோர்வே வாழ் தமிழீழ மக்களே,

இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் நாம் அனைவரும் ஆயிரமாய் அணிதிரள்வதள் ஊடாக எங்கள் உறவுகளைப் பட்டினிச் சாவில் இருந்து தடுக்குமாறும், உணவு மருந்துப் பொருட்களை அனுப்புமாறும் ஒருமித்த குரலில் நோர்வே அரசாங்கத்திற்கும், நோர்வேர்ஜிய உதவி நிறுவனங்களுக்கும் அழுத்தம் கொடுப்போம் என நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.