விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றிய கொளத்தூர் மணி கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியதாக பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணியை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்த பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கடந்த மாதம் 26 ஆம் நாள் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் திராவிட கழக மாநில தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடர்பாக அவதூறாகவும் உரையாற்றியதாக திண்டுக்கல் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் மணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகருக்கு நேற்று திங்கட்கிழமை அதிகாலை சென்ற காவல்துறையினர், அங்கு வீட்டில் இருந்த கொளத்தூர் மணியை கைது செய்தனர். பின்பு தமது ஊர்தியில் அவரை அழைத்துக்கொண்டு திண்டுக்கல்லுக்கு புறப்பட்டனர்.

வரும் வழியில் எரியோடு காவல் நிலையத்திற்கு கொளத்தூர் மணியை கொண்டு சென்றனர். அங்கு முற்பகல் 11:00 மணி தொடக்கம் பிற்பகல் 1:30 மணி வரை சுமார் 21/2 மணி நேரம் கொளத்தூர் மணியிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், பிற்பகல் மாலை 3:00 மணியளவில் கொளத்தூர் மணியை திண்டுக்கல் 2 ஆவது மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

அங்கு, நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு பேராட்டம் நடத்தி வருவதால், அவரை நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவரை நீதிபதி இராதாகிருஷ்ணன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.

கொளத்தூர் மணியை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பின்பு, திண்டுக்கல் சிறைக்கு அவரை காவல்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு இருந்து அவர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொளத்தூர் மணி மதுரை கொண்டு செல்லப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.