ஆனையிறவுக்கு கிழக்கே கரும்புலித் தாக்குதல்: சிறிலங்கா படைத்தரப்பு

ஆனையிறவுக்கு கிழக்கே உள்ள வண்ணாண்குளம் பகுதியில் நேற்று முன்நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆனையிறவுக்கு கிழக்காக உள்ள வெற்றிலைக்கேணியின் தெற்குப் பகுதியில் வண்ணாண்குளம் உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்நாள் திங்கட்கிழமை விடுதலைப் புலிகளின் அணி ஊடுருவியது.

ஊடுருவிய அந்த அணியில் இருந்த பெண் கரும்புலி உறுப்பினர் ஒருவர், 55 ஆவது படையணி மீது கரும்புலித் தாக்குதலை நடத்தினார். 1 தொடக்கம் 2 கிலோ அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்த தாக்குதலின் இழப்புக்கள் குறித்து படைத்தரப்பு தகவல் எதனையும் வெளியிடாத போதும், வெற்றிலைக்கேணிக்கு அண்மையாக விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தின் 55 ஆவது டிவிசன் படையினருக்கும் இடையில் திங்கட்கிழமை கடும் சமர் நடைபெற்றதாக இணையத் தளம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.