ஈழத் தமிழர்களை காப்பாற்றுங்கள்: சென்னையில் பிரித்தானிய துணைத் தூதுவரிடம் வலியுறுத்தல்

இலங்கையில் நடைபெற்று வரும் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அங்குள்ள இனப்பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்றும் சென்னையில் உள்ள பிரித்தானியா நாட்டின் துணைத் தூதுவரிடம் இலங்கை தமிழர் பாதுகாப்புக் குழுவினர் வலியுறுத்தி உள்ளனர்.

இலங்கையை 250 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த பிரித்தானியா நாட்டிற்கு இந்தக் கடமையை ஆற்றுவதற்கான தார்மீகப் பொறுப்பு இருக்கிறது என்றும் பழ.நெடுமாறன் தலைமையில் சென்ற இலங்கைப் பாதுகாப்புக்குழுத் தலைவர்கள் பிரித்தானியா நாட்டின் துணைத் தூதுவர் மைக்காமரிடம் எடுத்துரைத்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பேராசிரியர் மு.இராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரும் இடம்பெற்றுச் சென்ற குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரித்தானியா நாட்டின் துணை தூதுவர் அலுவலகத்தின் துணை தூதுவரைச் சந்தித்து முறையிட்டனர்.

அப்போது பேராசிரியர் மு.இராமதாஸ், பிரித்தானியா துணைத் தூதுவருக்கு இலங்கையில் இப்போது நிலவி வரும் நிலைமையை விரிவாக எடுத்துரைத்தார்.

உலகில் உள்ள மற்ற நாடுகளை விட இலங்கைப் பிரச்சனையில் தலையிட்டு அங்கு போர் நிறுத்தத்தை உருவாக்குவதற்கு பிரித்தானியா தார்மீக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் அதிக பொறுப்பு இருக்கிறது என்று பேராசிரியர் இராமதாஸ் எடுத்துரைத்தார்.

ஏனெனில் இலங்கையில் இருந்த தமிழ் பேரரசையும், சிங்கள அரசையும் ஒன்றாக இணைத்தது பிரித்தானியா நாடுதான். 250 ஆண்டு காலம் அந்த நாட்டை ஆண்டவர்கள் நீங்கள்தான். அந்த வகையில் இப்போது அங்கு நிலவும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பும் பிரித்தானியா நாட்டிற்குத்தான் அதிகம் இருக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

உலக அரங்கில் பிரித்தானியா நாட்டிற்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசை கட்டுப்படுத்தி அமைதி வழிக்கு கொண்டு வர முடியும்.

பொதுநலவாய நாடுகளின் கூட்டமைப்பில் சிறிலங்கா இருக்கிறது. அந்த அமைப்பின் முக்கிய உறுப்பினர் என்ற முறையில் பிரித்தானியா நாட்டால் இலங்கையை போர் நிறுத்தம் செய்வதற்கு ஒப்புதல் பெற முடியும்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் பிரித்தானியா நிரந்தர உறுப்பு நாடாக உள்ளது. பாதுகாப்பு அவையில் இலங்கைப் போரை நிறுத்தக்கோரி பிரித்தானியா நாடு தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் அங்கே போரை நிறுத்தி இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியும் என்பதையும் பிரித்தானியா துணைத் தூதுவரிடம் பேராசிரியர் இராமதாஸ் எடுத்துக் கூறினார்.

சிறிலங்கா அரசுக்கு பல்வேறு வகைகளில் பொருளாதாரம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிற நாடு என்கிற முறையிலும், பிரித்தானியாவின் அறிவுறுத்தலுக்கு சிறிலங்கா கட்டுப்பட்டிருக்கிறது என்றும், அப்படி கட்டுப்படாவிட்டால் சிறிலங்காவுக்கான அனைத்து பொருளாதார மற்றும் நிதியுதவிகளை நிறுத்தி விடுவோம் என்று பிரித்தானியா நிர்ப்பந்தம் கொடுத்தால் சிறிலங்கா பணிந்து விடும் என்றும் பாட்டாளி மக்கள் நாடாளுமன்ற குழுத் தலைவர் எடுத்துரைத்தார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு சமூக, அரசியல், நீதியை வழங்கக்கூடிய எல்லா வாய்ப்பும் வசதியும் கொண்ட ஒரு நாடாக பிரித்தானியா திகழ்கின்றது என்றும், எனவே பிரித்தானியா நாடு இந்த கடமையை ஆற்ற வேண்டும் என்று 7 கோடி தமிழ் மக்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறோம் என்றும் பேராசிரியர் இராமதாஸ் விளக்கிக் கூறினார்.

சந்திப்பிற்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய இலங்கை தமிழர் பாதுகாப்புக்குழுவின் தலைவர் பழ.நெடுமாறன், தங்களது இயக்கத்தின் சார்பில் மார்ச் 4 ஆம் நாள் தூத்துக்குடியிலும், 5 ஆம் நாள் திருச்சியிலும், 10 ஆம் நாள் வேலூரிலும், 11 சேலத்திலும், 16 ஆம் நாள் புதுச்சேரியிலும் பேரணிகளும், போராட்டங்களும் நடைபெற இருப்பதாக அறிவித்தார்.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தீவிரமாக நடந்து வருவதாகவும், எல்லாத்தரப்பு மக்களும் கையெழுத்திட ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் தெரிவித்த நெடுமாறன், விரைவில் 2 கோடி மக்கள் கையெழுத்திட்ட மனு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர், அமெரிக்க அதிபர், ரஷ்ய அரச தலைவர், பிரித்தானியா பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.