மதுரை அரசு மருத்துவமனையில் லஞ்சஒழிப்பு போலீஸ் சோதனை: 8 பேர் சிக்கினர்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவுக்கு மாவு கட்டும் இடம், பிரசவ வார்டு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் லஞ்சத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.நேற்று காலை லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையில் ஆறு குழுக்கள் பகல் 12 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். மேற்குறிப்பிட்ட பிரிவுகளில், 3 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர்.

பெண் போலீஸ் அதிகாரி இல்லாததால், பிரசவ வார்டில் சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு லஞ்ச புகாருக்கு ஆளானவர்கள் தப்பி ஓடினர். மாவுக்கட்டு போடும் பிரிவில் (வார்டு 15) லீலாவதி என்ற பணியாளர் லஞ்ச பணத்தை ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைத்திருந்தார். அங்கிருந்த பெண் போலீஸ் உதவியுடன் அவரிடமிருந்து 405 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. முத்துராமலிங்கம் என்ற ஊழியரிடம் 620 ரூபாயும், ஆபரேஷன் தியேட்டர் ஊழியர் முருகனிடம் 200ம், உணவுச் சீட்டு கொடுக்கும் இடத்தில் 1,000 ரூபாயும் கைப்பற்றப்பட்டன.அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் ஊழியர் மதுரைவீரனிடம் 870 ரூபாயும், நல்லழகுவிடம் 1,120 ம், கணேசனிடம் 520 ரூபாயும் கைப்பற்றப்பட்டன.

பிடிபட்ட எட்டு பேரிடமிருந்து மொத்தம் 3 ,000 ரூபாய் கைப்பற்றப்பட்டது.டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் கூறியதாவது : தொடர்ந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து இச்சோதனை செய்யப்பட்டது. அவ்வப்போது இது போன்று சோதனை நடத்துவோம். லஞ்சம் கொடுத்தவர்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளன. கையும், களவுமாக பிடிபடாததால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப்பதிவு செய்து துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வோம்.இவ்வாறு பாண்டியன் கூறினார். பிடிபட்டவர்களை சஸ்பெண்ட் செய்ய டீன் சிவக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

காத்திருந்த பிணம்: அவசர சிகிச்சைப் பிரிவிற்கு வரும் பிணங்களை பிரேத அறைக்கு எடுத்துச் செல்பவர் நல்லழகு. லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிடுவதை அறிந்த இவர், லஞ்சப் பணத்தை கட்டடத்தின் ஒரு பகுதியில் மறைத்து வைத்தார். இதை கைப்பற்றிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் இறந்தவர் உடல் ஒன்று அங்கு கொண்டு வரப்பட்டது. விசாரணை முடியும் வரை ஆம்புலன்சிலேயே அரைமணி நேரம் உடல் வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து லஞ்சஒழிப்பு போலீஸ் ஒருவர் அந்த ஆம்புலன்சில் ஏறிக் கொள்ள, பிணத்தை பிரேத அறைக்கு நல்லழகு எடுத்துச் சென்றார்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.