அரை மணி நேரத்துக்கும் அதிகமாக எரிந்து சேதம் விளைவிக்கும் எரிகுண்டு தாக்குதல் நேற்று

புதுமாத்தளன் பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் புதிய வகையான, வித்தியாசமான எரிகுண்டுகள் வந்து வீழ்ந்ததாக முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராசா வரதராசா தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதலில் எரிகாயமடைந்த 54 பேர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் 5 பேர் சத்திர சிகிச்சை அளிப்பதற்கான மருந்துப் பொருட்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் இறந்ததாகவும் டாக்டர் வரதராசன் பி.பி.சி.க்கு வழங்கிய பேட்டியில் கூறினார்.

புதிய ரகமான குண்டுகள் அவை விழுந்த இடங்களில் அரை மணி நேரத்திற்குப் பின்னரும் எரிந்து கொண்டிருப்பதாகவும் தாம் கண்ட 4 சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் பல இடங்களுக்கும் சென்றுவர முடியாத சூழ்நிலை காணப்பட்டதால் இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவித்த அவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு செயலிழக்கும் நிலை எற்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

நாளாந்தம் 3000 க்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெறுவதாகவும் மருந்துகள் போதிய அளவில் இல்லாததால் 5 குளிசைகள் வழங்க வேண்டிய இடத்தில் 2 குளிசைகளே வழங்கப்படுவதாகவும் மக்களுக்குப் போதிய அளவில் போசாக்கான உணவு கிடைக்காமையினாலேயே அதிகளவில் நோய்த்தாக்கம் ஏற்படுகின்றது என்றும் டாக்டர் வரதராசன் கூறினார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.