முல்லை. மக்களை வெளியேற்றத் துணைபோக வேண்டாம்; பாதுகாப்பு வலயத்தை விஸ்தரிக்கவே அமெரிக்கா உதவ வேண்டும்: பேர்ள் அமைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அமைத்துள்ள பாதுகாப்பு வலயத்தை விஸ்தரித்து இடம்பெயர்ந்து தவிக்கும் இரண்டு இலட்சம் மக்களுக்குரிய சேவைகளைச் செய்வதற்கு மட்டுமே அமெரிக்க அரசாங்கம் உதவவேண்டும். சிறிலங்காவில் சமத்துவத்துக்கும் நிவாரண உதவிக்குமான மக்கள் இயக்கம் (People for Equality and Relief in Srilanka – PEARL) அமெரிக்க அரசாங்கத்துக்கு மேற்கண்ட அவசர வேண்டுகோளை விடுத்திருக்கிறது.

அத்துடன் அங்கு சிக்குண்டுள்ள மக்களை அமெரிக்க பசுபிக் கட்டளை அணியின் (PACOM) உதவியுடன் வெளியேற்றி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு எந்த வகையிலும் துணை போகவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

முல்லைத்தீவில் போரில் சிக்குண்டுள்ள 2 இலட்சம் மக்களையும் யு.எஸ்.பசுபிக் கட்டளைப் பிரிவின் உதவியுடன் வெளியேற்றி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் திட்டம் ஒன்று குறித்து அறியவருகிறது. அந்தத் திட்டத்துக்கு துணை போக வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று வாஷிங்ரனில் இயங்கும் சிறிலங்காவில் சமத்துவத்துக்கும் நிவாரண உதவிக்குமான மக்கள் இயக்கம் “பேர்ள்” நேற்று விடுத்த அறிக்கையில் கேட்டுள்ளது.

இரண்டு இலட்சம் மக்களும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு வலயத்தின் பிரதேசத்தை விஸ்தரித்து மக்களுக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கும் வண்ணம் தொண்டர் நிறுவனங்கள் அங்கு பணிபுரியவும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பாளர்கள் தாராளமாக சென்றுவரவும் அனுமதிக்க வசதி செய்யப்படவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

போரில் சிக்கித் தவிக்கும் மக்கள் நெருக்குண்டு வசிக்காமல் “மூச்சு விடும்” வகையில் யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளுமாறு அமெரிக்கா இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் கேட்கப்பட்டுள்ளது.

போரில் சிக்குண்டுள்ள மக்களை அவர்களின் இடங்களில் இருந்து வெளியேற்றி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது அந்த மக்கள் தமது மரணத்துக்குரிய பிடியாணையில் ஒப்பம் இடுவதுக்கு நிகராகும். அத்தோடு அரசின் இன அழிப்பை நிறைவேற்றுவதாகவும் அது அமையும் என்று “பேர்ள்” அமைப்பின் பேச்சாளர் றோஷா ஹெப்ஸர் கருத்து வெளியிட்டார்.

“பேர்ள்” அமைப்பின் அறிக்கையை இந்திய இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.