உணவு, மருந்து இன்றி இறந்து கொண்டிருக்கும் மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அவசர கோரிக்கை

உணவு மருந்து இல்லாமையால் அடுத்து வரப்போகும் வாரங்களில் வன்னியில் உள்ள பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாரதூரமான உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் அனுப்பிவைக்க அவசர நடவடிக்கை எடுக்கும் படி சர்வதேச சமூகத்தினரிடம் கஜேந்திரன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வன்னியில் தற்பொழுது 350000 திற்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர். அனைவரும் தரப்பாள்களின் கீழேயே வாழ வேண்டிய நிலையிலுள்ளனர். மக்கள் தங்கியிருக்கும் இடங்களில் உணவு மருந்துகள் முற்றாக தீர்ந்துபோயுள்ள நிலையில் குடி தண்ணீருக்கும் மிகப் பெரிய தட்டுப்பாடு காணப்படுகின்றது. சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு தொற்று நோய்கள் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக தினமும் ஒரு வேளை உணவோடு பெருமளவு உடல் நலிவடைந்த நிலையில் மக்கள் வாழந்து வந்தனர். நோயாளர்கள் கற்பிணிப்பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு இருப்பு முடிவடைந்துள்ளநிலையில் ஒரு வேளை கஞ்சி மட்டுமே அவர்களுக்கு கிடைக்கின்றது. குழந்தைகள் வயிறு ஒட்டிய நிலையில் பசியொடு கையேந்தி பசிக்கு உணவு தரும்படி கையேந்தி அழுகின்றனர்.

பாலூட்டும் தாய்மார்கள் பலர் நோய் வாய்ப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாத நிலையில் பற்கற் பால்மாக்களும் இல்லாத நிலையில் குழந்தைகளுடய நிலை மிகவும் ஆபத்தான நிலையை அடைந்துள்ளது. பல்வேறுபட்ட நோய்த் தாக்கங்களுக்கும் உள்ளான பலர் ஏற்கனவே ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழக்க ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் பாதுகாப்பு வலயத்தினை இலக்கு வைத்து தினமும் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களாலும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாகவும் ஆகக் குறைந்தது 45 பொது மக்கள் கொல்லப்படுகின்றனர் 50-75 வரையான பொது மக்கள் படுகாயமடைகின்றனர். கடந்த தை, மாசி ஆகிய மாதங்களில் வன்னியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களிலும் விமானத் தாக்குதல்களிலும் 2241 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 5118 பொது மக்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

வன்னியில் தங்கியுள்ள மக்களுக்கென ஒரு வைத்தியசாலை கூட இல்லை. இடம் பெயர்ந்த நிலையில் இயங்கும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகள் மாத்தளன் என்ற இடத்திலேயே எதுவித அடிப்படை வசதிகளும் இன்றி சில வைததியர்களுடன் முதலுதவிச் சிகிச்சைகளை மட்டுமே வழங்கி வருகின்றது. அங்குமருந்துகள் எதுவும் இலலை அனைத்தும் முடிவடைந்துள்ளது.

வைத்திய வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஏற்கனவே பட்டினியால் உடல் நலிவடைந்திருந்தவர்களில் பல்வேறுபட்ட நோய்த் தாக்கங்களுக்கும் உள்ளான 18 பேர் பலியாகியுள்ளனர் இவ்வாறு இறந்தவர்களில் 10 பேர் உடல் நலம் குன்றியிருந்த சிறுவர்களும் அடங்குகின்றனர். இந் நிலை நீடித்தால் இன்னும் சில நாட்களில் சடுதியாக பெருமளவு மக்கள் பட்டினியால் இறக்கும் நிலை ஏற்படும்.

வன்னியில் உள்ள மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளியேற விரும்பவில்லை. இந்நிலையில் அந்த மக்களுக்கான உணவு மருந்துப் பொருட்களை அனுப்பாது பட்டினியால் மக்கள் இறக்கும் நிலையையும் மருந்து இன்றி உயிரிழக்கும் நிலையை ஏற்படுத்தி வன்னியிலுள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்ற இலங்கை அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் தொடர்நது துணை போவதை நிறுத்த வேண்டும்.

உணவு மருந்து இல்லாமையால் அடுத்து வரப்போகும் வாரங்களில் வன்னியில் உள்ள பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாரதூரமான உயிரிழப்புக்களை தடுக்கும் வகையில் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும்அனுப்பிவைக்க அவசர நடவடிக்கை எடுக்கும் படி சர்வதேச சமூகத்தினரிடம் வேண்டுகின்றேன்.

செ.கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
02.03.2009

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.