சிங்கப்பூரில் காஸ் கசிவு-தீயில் கருகி 3 இந்தியர்கள் பலி

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட காஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டுவாஸ் என்ற இடத்தில் உள்ள கெமிக் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை இரவு நைட்ரிக் அமில வாயு கசிந்தது. இதனால் அங்கு தீவிபத்து ஏற்பட்டது.

இதில் சிக்கி 2 இந்தியத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காயமடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உயிரிழந்த மூன்று இந்தியர்கள் விவரம் தெரியவரவில்லை. அவர்களுக்கு திருமணமாகி விட்டது என்றும், மனைவி, குழந்தைகள் இந்தியாவில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இறந்த மூன்று பேருக்கும் வயது 35க்குள்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் கட்டுமான நிறுவனங்கள், கடல் சார் பொறியியல் பிரிவுகளில் இவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.