12 தொகுதிகளில் தனித்துப் போட்டி – கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை

கோவை: தமிழகத்தில் 12 லோக்சபா தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவோம் என கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் கணியூரில் கடந்த மே மாதம் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவையின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது கொங்கு நாடு முன்னேற்றப் பேரவை என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.

மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக 5 உயரமுள்ள தீரன் சின்னமலை சிலை மாநாட்டு பந்தலில் நிறுவப்பட்டு கொங்கு இன மக்களின் கடவுளாக வழிபாடு செய்யப்பட்டது.

வழிபாடு செய்யப்பட்ட தீரன் சின்னமலை சிலை கொங்கு இன மக்களின் தரிசனத்திற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்ல நிர்வாகிகளால் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று காலை விசேஷ பூஜையுடன் ஊர்வல ஏற்பாடுகள் தொடங்கியது.

இதில் மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி, மாநில பொது செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கட்சி செயல்பாடுகள் குறித்து பின்னர் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை கட்சியின் நிர்வாகிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பே நியமிக்கப்படுவார்கள். அதுவரை பேரவை நிர்வாகிகளே கட்சிப்பணிகளை கவனித்துக் கொள்வார்கள்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் கொங்கு நாடு முன்னேற்ற பேரவை 12 தொகுதிகளில் தனித்தே போட்டியிடும். பிற கட்சிகளில் இல்லாத அளவிற்கு படித்தவர்களின் பங்களிப்பு எங்கள் கட்சிக்கு அதிக அளிவில் உள்ளது.

கொங்கு மண்டலத்தில் பிற கட்சிகளை சார்ந்தவர்களும் எங்கள் கட்சியில் தொடர்ந்து சேர்ந்தவண்ணம் உள்ளனர். கொங்கு இன மக்களின் ஒற்றுமையின் வெளிப்பாடே அரசியல் மாநாட்டின் வெற்றிக்கு காரணமாகும்.

இந்த வெற்றியே தமிழகத்தின் பிற அரசியல் கட்சி தலைவர்கள் கொங்கு நாடு முன்னேற்ற பேரவையின் பக்கம் பார்வையை திரும்ப செய்துள்ளது.

கொங்கு மக்களின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு எடுத்துச் சொல்ல பாராளுமன்ற தேர்தலில் எங்களின் பலத்தை நிரூபிக்க பணியாற்றி வருகிறோம் என்றார்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.