ஒபாமாவின் புதிய கொள்கை அவுட்ஸோர்ஸிங் துறையை பெரிதும் பாதிக்கும் – பிரணாப் முகர்ஜி

டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் புதிய தொழில்நுடப் பணிக் கொள்கை இந்திய நிறுவனங்களைப் பெரிதும் பாதிக்கும் என்பது உண்மைதான். எனவே இதனை இந்தியா எதிர்க்கிறது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது முதலாவது பட்ஜெட் உரையில் அவுட் ஸோர்ஸிங் எனப்படும் வெளிப்பணி ஒப்படைப்பு செய்யும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கிடையாது என அறிவித்துள்ளார்.

இதனால் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் நாடுகளிலேயே வெளிப்பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தக் கொள்கையின் சில உட்பிரிவுகள் வெளிநாட்டு அவுட்ஸோர்ஸிங் முறைக்கு வழிவிட்டாலும்கூட, இன்றைய அமெரிக்க சூழலில் எதற்கு வம்பு என பெரும்பாலான நிறுவனங்கள் அவுட்ஸோர்ஸிங் முறையை அடியோடு நிறுத்தி வருகின்றன.

இதனால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை பெரிதும் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளசு. இத்தகைய கொள்கையை உரியமுறையில் இந்தியா எடுத்துக் கூறி எதிர்ப்பை பதிவு செய்யும் என்றும் பிரணாப் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறியது:

சர்வதேச பொருளாதார தேக்க நிலை அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அனைத்து நாடுகளுமே சீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் தங்கள் நாட்டை மட்டும் பாதுகாக்கும் வகையிலான கொள்கைகளை வகுப்பது மிகவும் தவறான போக்காகும். தாராளமய பொருளாதார சூழலில் இத்தகைய அணுகுமுறையால் எதிர்மறையான விளைவுகள் தோன்றும்.

அதிபர் பராக் ஒபாமாவின் கருத்தால் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை பாதிக்கப்படும். மேலும் அந்நாட்டில் கணிசமான அளவுக்கு இந்தியப் பணியாளர்கள் உள்ளனர். அவர்களும் வேலையிழக்க நேரிடும். ஏற்கெனவே கணிசமான இந்தியர் பணியிழந்திருப்பதாக நமது தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல, ஒபாமா தனது கொள்கையை அறிவித்த சில நாட்களுக்குள் இந்திய நிறுவனங்கள் சில அவுட்ஸோர்ஸிங் ஆர்டர்களையும் இழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து தங்களைக் காக்கக் கோரி முறையிட்டுள்ளன அந்த நிறுவனங்கள்.

தனிப்பட்ட எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு கோரி அமெரிக்காவை இந்தியா நாடாது. ஆனால் தகவல் தொழில்நுட்பத் துறையைப் பாதிக்கும் இத்தகைய கொள்கை அறிவிப்பை மட்டும் மாற்றக் கோரும் திட்டமிட்டுள்ளது. அதுவும் பல ஆயிரம் பணியாளர்களைக் காக்க.

தற்போதைய சூழலில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று ஜி-20 மாநாட்டில் பேசுகையில் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கருத்து அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

வெளிப்பணி ஒப்படைப்பு நிறுவனங்களுக்கு வரி விதிக்கப்படும், அமெரிக்க குடும்பத்தினருக்கு 95 சதவீத வரிச் சலுகை அளிக்கப்படும் என ஒபாமா தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பணிகளை மேற்கொண்டுள்ளன. இந்நிறுவனங்கள் அனைத்தும் தற்போதைய அறிவிப்பால் பாதிக்கப்படும். இருப்பினும் வெளிநாடுகளில் பொருளீட்டும் நிறுவனங்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினரைப் பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு எந்த அளவு வரி என்றும், அமெரிக்கர்களை மட்டுமே பயன்படுத்தினால் வரிச் சலுகை எவ்வளவு என்பதும் முழுமையாக வெளியாகவில்லை. அப்படியிருந்தும் எச்சரிக்கை உணர்வுடன், அனைத்து நிறுவனங்களும் பணி ஆணைகளை ரத்து செய்து வருகின்றன, என்றார் பிரணாப் முகர்ஜி.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.