டி.எல்.எப்., நிறுவன முதலீட்டாளர்கள் புகார்: ரூ.40 – 70 லட்சம் பணம் கட்டியவர்கள் பாதிப்பு

சென்னை: டி.எல்.எப்., நிறுவனத்தின் சார்பில் கட்டும் அடுக்குமாடி வீடுகளுக்காக லட்சக்கணக்கில் பணம் கட்டியவர்கள், அந்நிறுவனத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ளனர். அதற்குள் பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு மொத்தத் தொகையிலிருந்து 32 சதவீதம் வரை குறைத்ததுபோல் சென்னை வாடிக்கையாளர்களுக்கும் குறைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டி.எல்.எப்., நிறுவனம் (டில்லி லீஸ் பைனான்ஸ்) சார்பில் சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 3,493 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட 2008ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை கொண்ட குடியிருப்புகளுக்கு 40 லட்சம் முதல் 75 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் வசிக்கும் டாக்டர்கள், ஆடிட்டர்கள், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் என, மொத்தம் 1,800 பேர் வீடுகளைப் பதிவு செய்தனர். இதில் பெரும்பாலானோர் 95 சதவீதம் வரை பணம் கட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஓராண்டாகியும் செம்மஞ்சேரியில் கொடுத்த பணத்திற்குரிய கட்டுமானப் பணிகள் நடக்கவில்லை. மேலும், டி.எல்.எப்., நிறுவனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்குச் சரியான தகவல் தொடர்பு இல்லாததால் பணத்தைக் கட்டியவர்களில் 1,100 பேர் ஒரு குழுவாகக் கூடினர். அதற்கு ஜான்சன் தலைவராகவும், முக்கிய நிர்வாகிகளாக வக்கீல் சியாம்சுந்தர், ராம்கோபால், முத்துக்கருப்பன், பிரசாத், மவுலி ஆகியோர் பொறுப் பாளர்களாகச் செயல்படுகின்றனர். டி.எல்.எப்., நிறுவனத்தில் பணம் கட்டியவர்களின் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் 300க் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நிர்வாகிகள் ஜான்சன், வக்கீல் சியாம்சுந்தர் உள்ளிட்ட பலர் கூறியதாவது: டி.எல்.எப்., நிறுவனம் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு 13 மாதங்களாகியும் நகர ஊரமைப்பு பிளான் வரவில்லை. டி.எல்.எப்., நிறுவனம் – லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் கூட்டாக முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானது அனைவரும் அறிந்ததே. இதில் அடுக்குமாடிக் குடியிருப்பு வேண்டி கட்டிய பணத்தில் 49 சதவீதம் லீமேன் பிரதர்ஸ் நிறுவனத்துடன் கலந்து விட்டதால், மீண்டும் செம்மஞ்சேரியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டி கொடுப்பார்களா? வரும் 2011ம் ஆண்டுக்குள் கட்டிக்கொடுக்க முடியுமா என்ற பயம் எங்களுக்கு வந்துவிட்டது. எனவே தான், பணம் கட்டியவர்கள் ஒரு குழுவாக சென்னையில் செயல்படுகிறோம். அதில் உறுப்பினர்களாக 1,300 பேர் உள்ளனர். தமிழகத்தில் அனைத்து பில்டர்களும் யு.டி.எஸ்., பதிவு செய்த பின் தான் கட்டடம் கட்டுகின்றனர். அதுபோல் முழுமையாக கட்டடப் பணி முடிவதற்கு முன் டி.எல்.எப்., நிறுவனமும் யு.டி.எஸ்., பதிவு செய்ய வேண்டும். பெங்களூரில் டி.எல்.எப்., நிறுவனம் 32 சதவீதம் வரை மொத்த தொகையிலிருந்து குறைத்துள்ளது. அதுபோல் சென்னையில் 10 சதவீதம் தான் மொத்த தொகையில் குறைத்துள்ளது. பெங்களூரைப் போல் சென்னையிலும் மொத்தத் தொகையில் குறைக்க வேண்டும்.

செம்மஞ்சேரியில் 3,493 அடுக்குமாடி கட்டும் குடியிருப்புக்கு 10 ஆயிரம் வாகனங்கள் வரலாம். அதற்கேற்ப பாதை இல்லை. சுனாமி காலனி மக்கள் வசிக்கும் வழியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது. நல்ல பாதையை அமைத்துக் கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி 13ம் தேதி டி.எல்.எப்., நிறுவனம் ஒரு கடிதத்தை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில், ‘தேவைப்படுபவர்கள் முழுப் பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளலாம்’ என அறிவித்தது. இதை நம்பி நிறையபேர் இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறுவதாக கடிதம் அனுப்பினர். ஆனால், அவர்களுக்கு எந்தவிதப் பதிலும் வரவில்லை. கடந்த 23ம் தேதி மொத்தத் தொகையில் 10 சதவீதம் குறைப்பதாக டி.எல்.எப்., நிறுவனம் அறிவித்ததில் யாருக்கும் திருப்தியில்லை. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் மீண்டும் மொத்தத் தொகையிலிருந்து குறைக்க வேண்டும். ஒரு வாரம் நாங்கள் கெடு விதித்துள்ளோம். மேலும், சென்னை டி.எல்.எப்., நிறுவனத்துடன் இனி பேசப் போவதில்லை. இங்குள்ளவர்கள் மீது நம்பிக்கை இல்லை. டில்லியில் இருந்து வரும் நிர்வாகிகளுடன் தான் இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.