புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை ஏற்க வேண்டும் – பிரணாப்

தூத்துக்குடி: விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு ஏற்று அமைதியான முறையில் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

தூத்துக்குடி அனல் மின் நிலையம் அருகே ரூ.4 ஆயிரத்து 900 கோடி மதிப்பில் மேலும் ஒரு அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, புதிய மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

விழாவில் அவர் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்.

பிரணாப் பேசுகையில், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவது இந்திய அரசுக்கு கவலையளிக்கிறது. போர் நடக்கும் இடத்தில் 70 ஆயிரம் மக்கள் சிக்கி இருப்பதாகவும், அங்கு தண்ணீர், உணவு மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அந்த பகுதியில் பல அப்பாவி மக்கள் உயிர் இழந்து உள்ளனர். இதனால் போர் நடக்கும் இடத்தில் சிக்கி உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு முன்வந்து இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இலங்கை அரசும் போர் நிறுத்தம் செய்து மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரவேண்டும். இதற்கு விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பும் தேவை.

தமிழ் மக்களை போர் நடைபெறும் இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல விடுதலைப்புலிகள் உதவ வேண்டும். தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவை சங்கம் ஆகிய அமைப்புகள் அவர்களுக்கு மருத்துவ வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையின் வடக்கு பகுதியில் இடம் பெயர்ந்து உள்ள மக்களுக்கு மருத்துவ உதவிகளை செய்வதற்காக இந்திய அரசு மருத்துவ குழு மற்றும் மருந்துகளை அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறது.

அடுத்து அரசியல் தீர்வாக, இலங்கையில் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் சம உரிமை கிடைப்பதை உறுதி படுத்தும் வகையில் அந்த அதிகார பகிர்வு இருக்க வேண்டும்.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு, இலங்கையின் சட்டத்துக்கு உட்பட்டு இறையாண்மை பாதிக்காத அளவில் அதிகார பகிர்வு இருக்க வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக இந்தியாவின் இந்த பொறுப்பான வேண்டுகோளை இலங்கை அரசும், மற்றவர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றார் பிரணாப்.

படுகொலைகளைத் தடுக்க இலங்கைக்கு கோரிக்கை…

முன்னதாக கொழும்பில் நடந்த சார்க் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு நேற்று திருவனந்தபுரம் திரும்பிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமது செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், போர் பகுதியில் அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு இலங்கையில், விரைவில் முழு அளவில் ஜனநாயக நடைமுறைகள் திரும்பும் என இந்தியா நம்புகிறது. அரசியல் தீர்வுக்கான வாய்ப்புகள் அங்கு அதிகரித்து, அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழும் நிலை உருவாகும்.

பிரச்சினைக்கு போர் தீர்வல்ல என்பதை இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். இதுகுறித்து நான் ராஜபக்சேவிடம் பேசியபோது நேரிலும் வலியுறுத்தியுள்ளேன். அப்பாவி மக்கள் பலியாவது குறித்து ராஜபக்சேவும் கவலை தெரிவித்தார் என்றார் அகமது.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.