மட்டக்களப்பில் சுற்றிவளைப்பின்போது விசேட அதிரடிப்படையினரால், 14 வயது சிறுமி தாயின் முன்னால் கதற கதற கற்பழிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் நேற்று காலை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு முழுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டது. இதன்போது வெல்லாவெளியிலுள்ள வீடொன்றிற்குச் சென்ற விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்த 14 வயது சிறுமியை கதறக் கதற கற்பழித்துள்ளனர். அச்சிறுமியின் தாயை கட்டிப்போட்டபின் தாயின் முன்னாலேயே இச்சிறுமி கற்பழிக்கப்பட்டிருக்கிறார்.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது:-

நேற்று அதிகாலை களுவாஞ்சிக்குடி- வெல்லாவெளிப் பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர். வீடுகளிலிருந்த ஆண்கள் அனைவரையும் ஆலயம் ஒன்றுக்குச் செல்லுமாறு ஒலிபெருக்கிமூலம் அறிவித்தனர். பின்னர் வீடு வீடாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விட்டிலுள்ள உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் விட்டிலிருக்கின்ற பெண்களின் விபரங்களையும் அவர்களின் வயதுகளையும் கேட்டு குறித்துக் கொண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீட்டிற்கு 5 விசேட அதிரடிப்படையினர் வந்ததாகவும் தாயைக் கட்டிப்போட்டபின்னர் எனைய நால்வரும் வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிற்க ஒருவர் மட்டும் சிறுமியை கதறக் கதற கற்பழித்துள்ளார். 14 வயதடைய வை.புனிதவதி என்ற இச்சிறுமி களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் 17 ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இவர் பருவமடைந்து 25 நாட்களே ஆகியிருப்பதாக இவரது தாயார் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்ப பொது வைத்தியசாலைக்குச் சென்ற வெல்லாவெளி பொலிஸார் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இச்சிறுமியை விசாரணை செய்துள்ளனர். எனினும் நேற்றையதினம் குறைந்தது 5 வீடுகளிலாவது பெண்கள் கற்பழிக்கப்பட்டிருக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான மேலதிக தகவல்களை தர வைத்தியசாலை தரப்பினர் மறுத்துவிட்டனர்.

ஆனால் நேற்றைய சுற்றிவளைப்பின்போது சில வீடுகளில் இருந்து பெண்களின் கூக்குரல் சத்தங்கள் கேட்டதாகவும் உடனே அவ்விடத்திற்குச் சென்று தம்மால் பார்க்கமுடியாமல் விசேட அதிரடிப் படையினர் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாகவும் வெல்லாவெளி பிரதேசவாசி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதலமைச்சர் பிள்ளையானை நேரில் சந்தித்த மக்கள் பிரதிநிதிகள் இச்சம்பவம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பிள்ளையான் இதற்காகத்தான் நான் சிவில் பாதுகாப்பை கேட்டிருந்தேன். கருணாதான் எல்லாவற்றையும் குழப்பினார். இப்பொழுது எனது கைகள் கட்டப்பட்டுள்ளன. கருணாவின் அடுத்த கூட்டத்தில் போய் கேளுங்கள் என கூறி நைசாக நழுவிவிட்டாராம். இச் சம்பவம் மட்டக்களப்பு மக்களிடையே பெரும்பீதியை தோற்றுவித்துள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.