முதலில் பணிக்கு திரும்புங்கள்: நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா அறிவுறுத்தல்

சென்னை: ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதால் வக்கீல்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கேட்டுக்கொண்டார். ஐகோர்ட் வளாக சம்பவம் தொடர்பாக நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் இன்று காலைவிசாரணையை துவக்கியது.

கடந்த 19ம் தேதி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வைகை மனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயகுமாரும் மனு தாக்கல் செய்தார்.இம்மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், பாஞ்சால் அடங்கிய “பெஞ்ச்’, சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிஷன் அமைத்தது. முடிந்தால் ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனை “பெஞ்ச்’ கேட்டுக்கொண்டது.

கமிஷன் முன் அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் வக்கீல்களின் பிரதிநிதிகள் தாக்கல் செய்யலாம் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தற்காலிக தலைமை நீதிபதியின் அனுமதியில்லாமல், ஐகோர்ட் வளாகத்தில் ஆயுதம் தாங்கிய போலீசாரை அனுமதித்த போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கலாமா என்பதை கமிஷன் முதலாவதாக பரிசீலிக்கலாம் எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இன்று காலை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் தன் விசாரணையை துவக்கியது. வக்கீல்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து மனுக்களை தாக்கல் செய்தனர். காயமடைந்த வக்கீல்கள், போலீசாரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 50 வக்கீல்கள், காயங்களை காட்டி நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணாவிடம் வாக்குமூலம் அளித்தனர். பின்னர் வழக்கறிஞர்கள் சங்கத்தினரை சந்தித்து பேசிய ஸ்ரீ கிருஷ்ணா, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். சங்க பிரதிநிதிகளிடம் கலந்தாலோசித்த பிறகு தீர்மானிக்கப்படும் என வழக்கறிஞர் சங்க தலைவர் தெரிவித்தார். பின்னர் தாக்குதலுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் ஓயாது எனவும், அதுவரை கோர்ட் புறக்கணிப்பு தொடரும் எனவும் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பிற்பகலுக்கு பின்னர் சென்னை டி.ஜி.பி., மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா முன்பு நேரில் ஆஜராகி தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் சேதப்படுத்தப்பட்ட பகுதிகளையும் இன்று அல்லது நாளை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பார்வையிடும். சுப்ரீம் கோர்ட்டில் 3ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருவதால், அதற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிடும் என வக்கீல்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.