மும்பை குண்டுவெடிப்பு: இந்தியன் முஜாஹிதீன் ஒப்புதல்

மும்பை: மும்பையில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த ரயில் நிலைய தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தியதை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் இணை நிறுவனரான முகம்மது சாதிக் இஸ்ரார் ஷேக் ஒப்புக் கொண்டுள்ளார். தானும், மற்றவர்களும் இணைந்தே குண்டு வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மும்பை நகர ரயில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த இந்த தொடர் குண்டுவெடிப்பில் 209 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று இந்த செயலைச் செய்தது தானும், மற்றவர்களும்தான் என்பதை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார் சாதிக்.

2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி இந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது.

பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னர் 1996ம் ஆண்டு சிமி இயக்கத்தில் இணைந்தார் சாதிக். பின்னர் லஷ்கர் இ தொய்பாவில் சேர்ந்தார். அவருடைய சகோதரியின் மைத்துனர் சலீம் முஜாஹித் இஸ்லாதான், சாதிக்கை லஷ்கர் அமைப்பில் சேர்த்து விட்டார்.

லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஆசிப் ரஸா கான் என்பவரிடம், சாதிக்கை இ மெயில் மூலம் அறிமுகப்படுத்தி வைத்தார் இஸ்லாஹி. ஒரு வருடத்திற்குப் பின்னர் ரஸா மும்பை வபந்தார். அவரிடம், கொல்கத்தாவில் 9 மாதங்கள் ரகசியப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என சாதிக்கிடம் ரஸா தெரிவித்தார்.

அதற்கு சாகித் ஒத்துக் கொண்டார். இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே வசிக்கும் ஒருவரின் தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளார் ரஸா. அந்த நபரை தொடர்பு கொண்ட சாதிக்கை, பாகிஸ்தானுக்கு பயிற்சிக்குச் செல்லத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார் அந்த கொல்கத்தா நபர்.

2003ம் ஆண்டு சாதிக் இன்னொரு பயிற்சியில் கலந்து கொண்டார். இது 45 நாட்களுக்கு நடந்தது. இந்த பயணத்தின்போது துபாயில் ரியாஸ் பத்கல் என்பவரை சந்தித்தார் சாதிக். பின்னர் ரஸாவின் உத்தரவுப்படி 2005ம் ஆண்டு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைத் தொடங்கினார் சாதிக்.

சமீபத்தில் டெல்லியில் பட்லா ஹவுஸில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆதிப் அமீன் என்பவர்தான் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் செயல் தலைவராக இருந்தவர். இவர்தான் மும்பை ரயில்களில் சாதிக் வெடிகுண்டுகளை வைக்க உதவியாக இருந்துள்ளார்.

2005ம் ஆண்டு முதல் நடந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சாதிக்குக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் மும்பை குண்டுவெடிப்பை மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளார் சாதிக்.

வாரணாசி ரயில் நிலைய குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை குண்டுவெடிப்புக்குத் தாங்கள் திட்டமிட்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார் சாதிக்.

:Source & Thanks : thats tamil

Leave a Reply

Your email address will not be published.