கடல் மார்க்கமாக மும்பை செல்லவில்லை கசாப்* பாக்., அடுத்த முரண்பாடு

இஸ்லாமாபாத்:மும்பை தாக்குதலின் போது கைதான பயங்கரவாதி அஜ்மல் கசாப், கடல் மார்க்கமாக கராச்சியில் இருந்து மும்பை சென்றான் என்பதற்கான ஆதாரம் இல்லை என, பாகிஸ்தான் கடற்படை தளபதி நோனம் பஷீர் கூறியுள்ளார்.

கராச்சியில் நிருபர்களிடம் பேசிய பஷீர் கூறியதாவது:பாகிஸ்தானிலிருந்து கடல் மார்க்கமாகத் தான் பயங்கரவாதி கசாப், மும்பை சென்றான் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கராச்சியில் இருந்து கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் சென்றார்கள் எனில், அவர்களைத் தடுக்க இந்திய கடலோரக் காவல்படை நடவடிக்கை எடுக்காதது ஏன்? மும்பை தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் எழுப்பியுள்ள பல கேள்விகளுக்கு, இந்திய தரப்பில் இன்னும் பதில் அளிக்கப்படவில்லை.

அந்த பதில் கிடைக்கும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியது தான்.கடல் வழியாக பயங்கரவாதிகள் தங்கள் நாட்டுக்குள் ஊடுருவுவதாக ஆரம்ப காலம் முதல் இந்திய அரசு புகார் கூறிவருகிறது. மும்பை தாக்குதலுக்கு முன்பிருந்தே இப்படித்தான் கூறி வருகிறது. பாகிஸ்தான் கடற்படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை மீறி பயங்கரவாதிகள் சென்றிருக்க முடியாது.

அப்படியே எங்களின் கண்காணிப்பில் இருந்து அவர்கள் தப்பியிருந்தாலும், எங்கள் கடற்படையை விட 10 மடங்கு பெரிதான இந்திய கடற்படை மற்றும் பாக்., கடலோரக் காவல் படையை விட 12 மடங்கு பெரிதான இந்திய கடலோரக் காவல் படையின் கண்காணிப்பில் இருந்து எப்படி தப்பியிருக்க முடியும்.இவர்கள் ஊடுருவும் அளவுக்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்.

இவற்றுக்கெல்லாம் பதில் அளிக்கப்பட வேண்டும்.கசாப்பும் மற்ற பயங்கரவாதிகளும் கடல் மார்க்கமாகத் தான் மும்பை சென்றனர் என்பதற்கு வேறு உறுதியான ஆதாரங்கள் கிடைக்க வேண்டும். அதுவரை இந்த விவகாரம் தொடர்பாக நான் வேறு கருத்து எதையும் தெரிவிக்க மாட்டேன்.இவ்வாறு நோனம் பஷீர் கூறினார்.அதே நேரத்தில் பயங்கரவாதி கசாப் குறித்து முரண்பட்ட தகவல் தந்ததாக அரசு வக்கீலின் பதவியை, பாக்., அரசு பறித்தது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.