தவறான சிகிச்சையால் பெண் இறப்பு சடலத்துடன் ஆஸ்பத்திரி முற்றுகை

தேனி : தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி நள்ளிரவில் சடலத்துடன் தேனியில் தனியார் ஆஸ்பத்திரியை உறவினர்கள் முற்றுகையிட்டனர். தேனி மாவட்டம், பூசாரிகவுண்டன்பட்டியை சேர்ந்தஆசிரியர் மாரியப்பன்(27).

இவரது மனைவி ஹேமலதாவிற்கு ஜனவரியில் தலைப்பிரசவத்தில் பெண் குழந்தை தேனியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்தது. பிப்.,4ம் தேதி ஹேமலதாவும், குழந்தையும் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டிற்கு சென்றனர். வீட்டில் இருந்த ஹேமலதாவிற்கு இரண்டு நாட்கள் கழித்து திடீரென காய்ச்சல், தலை வலி, உடல் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரசவம் நடந்த ஆஸ்பத்திரிக்கு பிப்., 6ம் தேதி சென்று கேட்டபோது, பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் கொடுத்துள்ளனர். தொடர்ந்து ஒரு வாரம் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றவரை, 14ம் தேதி உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஹேமலதாவின் உடல் முழுக்க தோல் கருப்பாக மாறி வந்த நிலையில், வேறு ஆஸ்பத்திரியில் சென்று பார்க்குமாறு 19ம் தேதி டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அன்றைய தினமே மதுரையிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு உடல் முழுவதும் தோல் உரிந்து, வெடிப்பு ஏற்பட்டு, ரத்தத்துடன் சீழ் வடிய துவங்கியது. மருந்துகளால் ஏற்பட்ட ஒவ்வாமையால் ரத்தத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் மாலை ஹேமலதா இறந்தார். அவரது இறப்பிற்கு தேனி தனியார் ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையே காரணம் என கூறி உறவினர்கள், நண்பர்கள் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹேமலதாவின் உடலை இரவு 1.15 மணிக்கு அந்த ஆஸ்பத்திரி முன் வைத்து முற்றுகையிட்டனர்.

டி.எஸ்.பி.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஹேமலதாவின் கணவர் மாரியப்பன், அவரது உறவினர்கள், நண்பர்கள் ஆஸ்பத்திரி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பின், அதிகாலை 3 மணிக்கு உடலை எடுத்துச்சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.