30 சடலங்கள் மீட்பு; 130 ராணுவ அதிகாரிகள் எங்கே? : கலவரம் ஓய்ந்தும் பீதி அதிகரிப்பு

தாகா: வங்கதேசத்தில் துணை ராணுவப் படையினரால் ஏற்பட்ட கலவரம் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. இருந்தாலும், துணை ராணுவப் படை தலைமையகத்தில் இருந்த 130க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகளைக் காணவில்லை.

அவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டு விட்டனரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் தெரியவில்லை. இதனால், அவர்களது குடும்பத்தினர் பீதி அடைந்துள்ளனர்.வங்கதேச தலைநகர் தாகாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தில், கடந்த 25ம் தேதி திடீர் கிளர்ச்சி வெடித்தது. ஊதிய உயர்வில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், தங்கள் சக அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். இதில், எல்லை பாதுகாப்புப் படை இயக்குனர் ஷகீல் அகமது உட்பட 11 அதிகாரிகள் உயிரிழந்தனர்.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் வேண்டுகோளை அடுத்து, கிளர்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள் சரண் அடைந்தனர்.

இருந்தாலும், நாட்டின் மற்ற பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். துப்பாக்கிகளுடன் வீதிகளுக்கு வந்து சரமாரியாகச் சுட்டனர்.இதில், மொத்தமாக 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், “கலவரத்தில் ஈடுபட்ட வீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு கிளர்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள், ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைய வேண்டும்’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.நாடு முழுவதும் உள்ள துணை ராணுவப் படை முகாம்களுக்கு வெளியே ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

தாகாவில் உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தைச் சுற்றி ராணுவம் குவிக்கப்பட்டது. ராணுவ டாங்குகளும் தலைமையகத்தை முற்றுகையிட்டன.30 சடலங்கள்: இதையடுத்து, கிளர்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள் ஒவ்வொருவராக ராணுவ அதிகாரிகளிடம் ஆயுதத்தை ஒப்படைத்து விட்டு சரண் அடைந்தனர். துணை ராணுவப் படை தலைமையகத்தை ராணுவம் மற்றும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.தலைமையகம் முழுவதும் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், 22 அதிகாரிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்; 11 உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், அழுகிய நிலையில் மேலும் 30 அதிகாரிகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து வங்கதேச தனியார் “டிவி’ சேனல் வெளியிட்டுள்ள தகவலில், “துணை ராணுவப் படையினரிடையே கலவரம் வெடித்த போது, அங்கு துணை ராணுவப் படை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவர்களில், இன்னும் 130 பேரை காணவில்லை. அவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டு விட்டனரா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. தலைமையகத்தை ஒட்டியுள்ள கழிவு நீர் கால்வாயில் இருந்து 50க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன’ எனக் கூறியுள்ளது.துணை ராணுவப் படை அதிகாரிகள் பலர் உயிருடன் புதைக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, காணாமல் போன அதிகாரிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், துணை ராணுவப் படை தலைமையகத்திற்கு வெளியே சோகத்துடன் குவிந்திருந்தனர்.

பிரதமர் ஹசீனா: “அவர்கள் உயிருடன் உள்ளனரா, இல்லையா என்பதையாவது கூறுங்கள்’ என அதிகாரிகளிடம் அழுது புலம்பினர்.ஆயுதங்களை ஒப்படைத்த பின், சில எல்லை பாதுகாப்புப் படையினர் தப்பிச் சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களைத் தேடி, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் ராணுவ அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.வங்கதேச உள்துறை அமைச்சர் சகாரா காடூன் கூறுகையில், “வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்த பின், தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. இயல்பு நிலை திரும்புவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். பொதுமக்கள் வதந்திகளை நம்பி பீதியடைய வேண்டாம்’ என்றார்.
பிரதமர் ஹசீனா கூறுகையில், “கலவரத்தில் கொல்லப்பட்ட துணை ராணுவப் படை அதிகாரிகளின் உடல்கள் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்’ என்றார்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.