வன்னியில் நாள் ஒன்றுக்கு பல பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள்: ஜோன் ஹோல்ம்ஸ் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கை

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பியுள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானத்துறை பிரதிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் நேற்று தமது விஜயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இதன்போது அவர் இலங்கையில் தாம் கவனித்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அதுவும் இந்த வருட ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள நிலைமை பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கப்படைகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் மீது தாக்குதல்களை நடத்த ஆரம்பித்த பின்னர் பொதுமக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து இடம்பெயர்ந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் தற்போதும் வன்னியில் சிக்குண்டுள்ளனர். இந்தநிலையில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 14 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் அவர்கள் தற்போது தங்கியுள்ளனர். அத்துடன் படையினருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரில் அவர்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக ஹோல்ம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அங்கிருந்து அவர்களை வெளியேறுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வருவதற்கான உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹோல்ம்ஸ் தமது உரையின் போது தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் 70 ஆயிரம் மக்களே உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. எனினும் ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய தமிழ் தரப்புகளும் வன்னியில் 2 இலட்சம் முதல் 3 இலட்சம் வரையிலான மக்கள் சிக்குண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இடம்பெறும் யுத்தத்தினால் அதிகம் பொதுமக்களே அங்கு பாதிக்கப்படுவதாக நம்பப்படுகிறது. எனினும் தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் அங்கு செயற்படாமை காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை பெறமுடியவில்லை. எனினும் நாள் ஒன்றுக்கு குறைந்தது பல பொதுமக்கள் கொல்லப்படும் பலர் காயமடைகின்றனர் என தாம் நம்புவதாக ஹோல்ம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

சண்டை ஆரம்பமான பின்னர் இந்த ஜனவரி முதல் உலக உணவுத்திட்டத்தின் சேவைகள் தடைப்பட்டமையால், அரசாங்க அதிபரும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன மாத்திரமே சிக்குண்டுள்ள மக்களுக்கான உணவு விநியோகங்களை மேற்கொண்டு வருகின்றன. அங்கு கழிப்பறைகளும் கூடார வசதிகளும் அருகியே காணப்படுகின்றன.

தாம் விஜயத்தின் போது அரசாங்க தரப்பு ஜனாதிபதி மற்றும் முக்கியமான தமிழ் கட்சி ஒன்றின் தலைவர் ஆகியோரை சந்தித்ததாக தெரிவித்த ஹோல்ம்ஸ், இணைத்தலைமை நாடுகளின் பிரநிதிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியதாக குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் தாம் போர் நடைபெறும் இடத்தில் இருந்து தப்பிவந்த சுமார் 30 ஆயிரம் மக்கள் தங்கியுள்ள இடத்திற்கு விஜயம் செய்ததாக தெரிவித்த ஹோல்ம்ஸ், “மெனிக் பாம்” நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு குடிநீர் மற்றும் கழப்பறை வசதிகள் சுகாதாரம் அவர்கள் நீண்டகால வாழ்க்கைக்கு சாத்தியமாகாது என்ற குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இந்த முகாம்களுக்கு ஐக்கிய நாடுகள் மற்றும் தன்னார்வு நிறுவனங்களின் செயற்பாடுகள் குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. அத்துடன் இங்கு தங்கியுள்ள மக்கள் வெளியேற ஏற்றுக்கொள்ளமுடியாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வன்னியில் உள்ள மக்களின் பாதுகாப்பு குறித்து இரண்டு தரப்பும் சர்வதேச நியதிகளுக்கு அமைய நடந்துக்கொள்ளவேண்டும் என கோரியுள்ளதாக ஹோல்ம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் வன்னியில் இருந்து வெளியேறும் போது தமிழீழவிடுதலைப்புலிகள் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் தாம் இலங்கை அரசாங்கத்திடம் வன்னியில் இருந்து வெளியேறும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என கோரியுள்ளதாக ஹோல்ம்ஸ் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் சிக்குண்டுள்ள பகுதிகளை நோக்கி, ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஹோல்ம்ஸ் குறிப்பிட்டார்.

அரசாங்கம் வன்னியில் சிக்குண்டுள்ள மக்களுக்காக அண்மையில் 40 தொன் உணவுகளையும் பின்னர் 10 தொன் உணவுகளையும் அனுப்பியுள்ளது. எனினும் இது அங்குள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யாது என ஹோம்ஸ் சுட்டிக்காட்டிள்ளார்.

இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு மேலும் 400 ஏக்கர் நிலத்தில் தற்காலிக இருப்பிடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது 25 ஏக்கர் நிலப்பரப்பிலேயே 25 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வன்னியில் இருந்து வெளியேறுவோரை கண்காணிப்பதற்காக ஐக்கியநாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தினரை (UNHCR) அனுமதிப்பது என அரசாங்கம் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இடம்பெயர்ந்த நலன்புரி முகாமில் தங்கியுள்ளவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரை சுதந்திரமாக நடமாடுவதற்கும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இதேவேளை யுத்தம் முடிவடையும் நிலையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் ஹோல்ம்ஸ் குறிப்பிட்டார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.