கலெக்டர் முன் அரசு மீது பாய்ந்த பாமக எம்.பி

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த அரசு விழாவில், மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில், தமிழக அரசை பாமக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுச்சாமி கடுமையாக விமர்சித்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் தெற்கு வீதி மற்றும் மேல வீதியில் சுமார் 15 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிழற்குடை கடந்த ஓராண்டுக்கு மேல் கட்டப்பட்டும் பல்வேறு காரணங்களால் திறக்கப்படாமல் இருந்தது.

இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு தலைமையில் சிதம்பரத்தில் இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிதம்பரம் தொகுதி பாமக எம்.பி. பொன்னுசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, பாமக முயற்சியினால் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் இரவு யாரும் இல்லாத நேரத்தில் தமிழக அமைச்சர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மரியாதை கூட கொடுக்கத் தெரியாத ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

இந்த பஸ் நிறுத்த திறப்பு விழாவை மிக எளிமையாக நடத்தி உள்ளார்கள். இந்த விழாவை மக்களுக்கு தெரியும்படி விளம்பரம் செய்து நடத்தி இருக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர் கூறியதை இங்குள்ள நகராட்சி ஆணையரும், பொறியாளரும் கேட்கவில்லை. இவர்கள் யாருக்கோ பயந்துகொண்டு செயல்பட்டு உள்ளனர். அரசாங்கம் என்பது அதிகாரிகள் தான்; அரசியல்வாதிகள் கிடையாது.

சிதம்பரம் எம்.பி. தொகுதிக்குட் பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் கருணாநிதியிடம் எழுதிக்கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நான் கொடுத்த மனு என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

திறப்பு விழா காணும் இந்த புதிய பேருந்து நிழற்குடைக்கு பின்புறம் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அதனை கலெக்டர் உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் நாங்களே டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடுவோம்.

அதேபோல் சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள பஸ் நிழற்குடையிலேயே சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனையும் கலெக்டர் அகற்ற வேண்டும். இல்லையேல் பாமகவினர் இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவார்கள் என்றார்.

பொன்னுச்சாமியின் பேச்சால் மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து குறுக்கிட்ட ஆட்சித் தலைவர் ரத்னூ, பொன்னுச்சாமியை சமாதானப்படுத்தினார். டாஸ்மாக் கடை மற்றும் நிழற்குடை ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதியளித்தார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.