குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை; புதுமாத்தளனில் மக்கள் பேரவலம்: செஞ்சிலுவைக் குழு அறிக்கை

வன்னியில் மக்கள் அதிகளவில் தங்கியுள்ள புதுமாத்தளன் பகுதியில் குடிதண்ணீருக்குக் கூடப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. அங்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ள செஞ்சிலுவை சர்வதேசக் குழு அப்பகுதியும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் பாதுகாப்பற்றவையாக மாறியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.


மக்கள் உணவு, குடிதண்ணீர், பாதுகாப்புக் காரணங்களுக்காக கரையோரப் பகுதிகளை நோக்கித் தொடர்ந்து இடம்பெயர்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள செஞ்சிலுவைக்குழு, அங்குள்ள நிலைமை குறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:

வன்னியில் தற்போது ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பு, உணவு, குடிதண்ணீர் போன்றவற்றைத் தேடியும் யுத்தத்திலிருந்து தப்புவதற்காகவும் கரையோரப்பகுதிகளை நோக்கி மேலும் இடம்பெயர்கின்றனர்.

உண்பதற்கு ஏதாவது உள்ளதா எனத் தேடுகின்றனர். புதுமாத்தளனில் போதிய குடிதண்ணீர் இல்லாததால் தண்ணீரைத் தேடி மக்கள் நீண்டதூரம் செல்கின்றனர்.

போதிய சுத்தமான நீர் இல்லாததே பாரிய மனிதாபிமான கவலையாகவுள்ளது. கரையோரப் பகுதியில் பொதுமக்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

மோதல் தொடர்வதால் இடம்பெயரும் மக்களுக்கான இடம் குறுகி வருகின்றது. புதுமாத்தளனைச் சுற்றியுள்ள பகுதி தற்போது பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது.
மக்கள் பதுங்குகுழிகளை அமைத்து அவற்றுக்குள் பல மணி நேரம் தங்குகின்றனர்.

மரபுவழி மருத்துவ நிலையங்கள் எவையும் இயங்கவில்லை. ஒரு சில தற்காலிக வைத்தியசாலைகள் மாத்திரம் உள்ளன. காயமடைந்தவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் நாளாந்தம் புதுமாத்தளன் நோக்கி வருகின்றனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்காக கர்ப்பிணித் தாய்மார்கள் எங்கு பிரசவிக்க முடியுமோ அங்கு பிரசவிக்கின்றனர்.

மருந்துப் பொருள்கள் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாகவுள்ளது. அங்குள்ள ஒரு சில மருத்துவப் பணியாளர்கள் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர்.
மக்கள் வாழும் நிலைகள் காரணமாகப் புதுமாத்தளன் பகுதியில் தொற்றுநோய் பரவும் ஆபத்து அதிகமாகவுள்ளது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.