இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா.வில் பாதுகாப்பு சபை செய்தியாளர் மாநாடு இன்று

இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் செய்தியாளர் மாநாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது என “இன்னர் சிற்றி பிரஸ்” செய்தியாளர் மத்தி யூஸ் ரஸல் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான விளக்கும் செய்தியாளர் மாநாடு நடத்தத் தேவையில்லை என்று அந்நாட்டுக்குச் சென்று திரும்பிய ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மூன்று தினங்களுக்கு முன்னர் ரஸலிடம் கூறியிருந்தார்.

பாதுகாப்பு கவுன்ஸிலின் இந்த மாதத்துக்கான தலைவர் யுக்கியோ ரக்காசோவும், இலங்கை விவகாரம் தொடர்பான செய்தியாளர் மாநாட்டுக்கான காத்திரமான கோரிக்கை வரவில்லை என்று தெரிவித்திருந்தார்.

எனினும் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாடு நடைபெறும் என்று பாதுகாப்புக் கவுன்ஸிலின் ஐந்து நாடுகளில் ஒன்றின் பிரதிநிதி நேற்றுக்காலை தமக்குத் தெரிவித்ததாக மத்தியூஸ் ரஸல் தெரிவித்துள்ளார்.

தமக்கு தகவல் தெரிவித்த பாதுகாப்புசசபை உறுப்பு நாட்டின் பிரதிநிதி, இது விடயம் சம்பந்தமாக இலங்கைக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சமாதானத்தைக் கட்டி எழுப்புவது குறித்து கிரேக்கத்தின் வெளியுறவு அமைச்சர் செய்தியாளருக்கு விவரித்தபின்னர் ” வேறு விடயங்கள்” என்ற தலைப்பின் இலங்கை விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.