மும்பை தாக்குதல்: 2 இந்தியர்களுக்கு முக்கியத் தொடர்பு

மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாஹிம் இப்ராகிம் மற்றும் சபாபுதீன் ஆகிய இரு இந்தியர்களுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக மும்பை போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு மும்பை குறித்த முக்கிய தகவல்களும், அதன் துல்லியமான வரைபடம் ஒன்றையும் தந்து சதி செயலுக்கு இவர்கள் துணை புரிந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கோர சம்பவம் உலகையே குலுக்கியது.

இது தொடர்பான 11,280 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பாஹிம், சபாபுதீன் ஆகிய இந்தியர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இவர்கள் இருவரும் மும்பை தாக்குதலுக்கு முன்னதாக மும்பை நகர் குறித்து முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர்.

அவர்களில் பாஹிம், மும்பை நகரின் முக்கிய பகுதிகளின் வரைபடம் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்கள் குறித்து அங்குலம் அங்குலமாக தகவல் தந்துள்ளான். அதை வாங்கிய சபாபுதீன் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் முகாமுக்கு அனுப்பியுள்ளான்.

சபாபுதீனுக்கும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியும், லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவருமான ஜகிர்-உர்-ரஹ்மான் லக்வி மற்றும் அபு ஹாபாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த 2007ல் சிஆர்பிஎப் முகாம் ஒன்றை தாக்கிய விவகாரத்தில் உபி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். தற்போது அவர்கள் மீது இந்த வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குற்றப்பத்திரிகையில்,

தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக, கசாப் உள்ளி்ட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஹாபா, சபாபுத்தின் அனுப்பிய வரைபடங்களை காண்பித்து பயிற்சி தந்துள்ளார்.

பயிற்சியின் முடிவில் ஹாபா வரைபடங்களில் இருந்து குறுக்கு கேள்வி கேட்டு அவர்கள் தீவிரவாத செயலுக்கு தயாராகி வருகின்றனரா என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதை பஹிமும், சபாபுத்தினும் பிரத்யோகமாக தயாரித்து கொடுத்ததாக கசாப் உள்ளிட்டோர்களிடம் தெரிவித்துள்ளார் என்கிறது குற்றப்பத்திரிகை.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.