ஊழிர்களுக்கு ‘டாடா’ சொல்லத் தயாராகும் டிசிஎஸ்!

கொல்கத்தா: உலகப் பொருளாதார பெருமந்தம் கடைசியில் டாடாவின் டிசிஎஸ்ஸையும் (டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸ்) மிகக் கடுமையாகவே பாதித்துள்ளது.

இப்போது அவர்களுக்கும் வேறு வழியில்லை. ஆட்கள் குறைப்பு, சம்பளக் குறைப்பு மற்றும் நிறுவனத்தின் மொத்தச் செலவையுமே குறைப்பது என படு மோசமான சூழலுக்குள் செல்வதை இனி தடுக்க முடியாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது டிசிஎஸ்.

இந்திய ஐடி துறையின் மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்று டிசிஎஸ். சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஐடி பிரதிநிதியாகத் திகழும் நிறுவனம் இது.

ஆனால் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாயில் 53 சதவிகிதம் ஊழியர் சம்பளம் மற்றும் இதர செலவினங்களுக்கே போய் விடுகிறதாம்.

சர்வதேசப் பொருளாதாரம் சரிந்து, வேலைக்கான ஆர்டர்களும் நின்று வருவதால் டிசிஎஸ்ஸின் வருவாய் வெகுவாகக் குறைந்து, இப்போது அதிகப்படி உழியர்களே, அந்நிறுவனத்துக்கு சுமையாகத் தெரிகின்றனர்.

இதனால் செலவுக் குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கிவிட்டது டிசிஎஸ். இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ராமதுரையே அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

“நிலைமை படுமோசமடைந்து வருகிறது. இனி வரும் மாதங்களில் ஊழியர்கள் யாரும் சம்பல உயர்வை எதிர்பார்க்காதீர்கள். கடுமையான ஆட்குறைப்பு நடவடிக்கை மற்றும் ஊதியக் குறைப்புக்குக் கூட வாய்ப்பிருக்கிறது. மீண்டும் ஆரம்பித்த இடத்திலிருந்தே துவங்க வேண்டிய மிக மோசமான நிலையில்தான் நிலாமை உள்ளது.

டிசிஎஸ்ஸில் ஊழியர்களுக்குத் தரப்படும் கூடுதல் ஊக்க சம்பளம் முழுமையாக நிறுத்தப்படும். மேலும் வகிக்கும் பதவிக்கேற்ப வழங்கப்படும் கூடுதல் சம்பளமும் (ஊழியரின் மொத்த சம்பளத்தில் 8 சதவிகிதம்) முழுமையாக நிறுத்தப்படும். எந்தெந்த வழிகளில் முடியுமோ, அந்தந்த வழிகளைப் பிரயோகித்து செலவைக் குறைத்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலையில் இப்போது உள்ளோம்”, என்றார்.

மேலும் வேலை நேரத்தையும் இப்போது அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராமதுரை அறிவித்துள்ளார். அதன்படி இனி வாரம் 40 மணி நேரம் என்றிருந்த வேலை நேரம் இப்போது 45 மணி நேரங்களாக மாற்றியமைக்கப்படுகிறது.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.