சென்னை உயர்நீதிமன்றம் முன்பு போலீஸ்காரர் திடீர் தீக்குளிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஆயுதப்படை காவலர் ரவிக்குமார் என்பவர் நேற்று திடீரென தீக்குளித்தார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் ரவிக்குமார். ஆயுதப்படையில் இவர் காவலராக உள்ளார்.

கலவர தினத்தன்று இவர் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே பணியில் இருந்தார். அப்போது வக்கீல்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிளேடுகளால் அவரது உடலில் கீறியதில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரவிக்குமார்.

சில நாட்களுக்கு முன்பு அவர் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்து வக்கீல்களுக்கு எதிராக கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், நேற்று மாலை, திடீரென உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்தின் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ரவிக்குமாரை மீட்டுக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தில்,

வக்கீல்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஆனால் போலீசாரிடம் ஒற்றுமை இல்லை. போலீசாரும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், தொடர்ந்து எல்லா சம்பவங்களிலும் போலீஸ்காரர்கள் தான் தாக்கப்படுகிறார்கள். போலீஸ்காரர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இப்போது ஐகோர்ட்டு சம்பவத்தில் 5 உயர் போலீஸ் அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் கல்வீசி தாக்கிய வக்கீல்கள் மீதும், போலீஸ் நிலையத்தை எரித்த வக்கீல்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.

வக்கீல்கள் கல்வீசி தாக்கியதையும், போலீஸ் நிலையத்தை எரித்ததையும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டன. ஆனால், போலீஸ் அதிகாரிகளை மட்டும் மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

போலீசாருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? என்று தெரியவில்லை. இதனால் மன ரீதியாக நான் வருத்தம் அடைந்தேன். எனது வருத்தத்தை தெரிவிப்பதற்காக தீக்குளித்து உயிரைவிட முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார் ரவிக்குமார்.

ரவிக்குமாருக்கு தொடை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ்காரர் தீக்குளித்த சம்பவம் சென்னை காவல்துறையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு

இந்த நிலையில் உயர்நீதிமன்றக் காவல் பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்த போலீஸார் மீது 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.