கடுமையாக தாக்கி வீதியில் வீசப்பட்டார் வித்தியாதரன்: கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள தெமட்டகொட குற்றப்புலனாய்வுத்துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ‘உதயன்’ மற்றும் ‘சுடொரொளி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தலையிலும் காலிலும் கடுமையாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளை வானில் கடத்திய ஆயுததாரிகள் வித்தியாதரனை கடுமையாக தாக்கி விட்டு தெமட்டகொடவில் வீதியோரத்தில் வானில் இருந்து வெளியே தள்ளி விட்டு சென்றதாகவும் பின்னர் தெமட்டகொட காவல்துறையினர் அவரை கைது செய்து குற்றப்புலனாய்வு தலைமை அலுவலகத்தில் தடுத்து வைத்திருக்கின்றனர் என்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, வித்தியாதரனின் மனைவி கலா வித்தியாதரனும் அவரது மூன்று பிள்ளைகளும் தெமட்டகொட குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு நேற்று வியாழக்கிழமை மாலை சென்று பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு பார்வையிடுவதற்கான அனுமதியை காவல்துறையினர் வழங்கியதாக வித்தியாதரனின் மைத்துனரும் ‘உதயன்’ மற்றும் ‘சுடொரொளி’ பத்திரிகைகளின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஈ.சரவணபவன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதேவேளை, கல்கிசையில் உள்ள ‘மகிந்த’ மலர்ச்சாலையில் வித்தியாதரன் கடத்தப்பட்டமை தொடர்பாகவும் மற்றும் வேறு சில விடயங்கள் குறித்தும் கல்கிசை இரகசிய காவல்துறையினர் நேற்று பிற்பகல் தன்னிடம் விசாரணை நடத்தியதாக் சரவணபவன் மேலும் கூறினார்.

இதேவேளை, கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்கள் வித்தியாதரனை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுககு அழுத்தம் கொடுத்து வருவதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

Source & thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.