பிரிட்டன் பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் சூடான விவாதம்

இலங்கையில் நிலைமை மோசமடைந்து வருகையில் அங்கு தொடர்ந்தும் இனப்படுகொலைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றில் நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமை நடைபெற்ற முழுநேர விவாதத்தின் போது ஏற்றுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றில் இது குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போது கருத்து தெரிவித்த எல்பின் லிபியட் எம்.பி.யின் கூற்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இதனை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

மேலும் இலங்கையில் சிறுபான்மையினரின் பிரச்சினைக்குத் தீர்வாக அவர்களது உரிமைகளை விலையாகக் கொடுக்க முடியாதென்றும் இவ்வாறானதொரு அணுகுமுறையின் கீழ்தான் நாங்களும் செயற்பட்டு வருவதாகவும் இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பிரிட்டனால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதுவர் டெஸ் பிறவுணுடன் இணைந்து செயற்படுமாறு இலங்கை அரசை பிரிட்டன் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

வன்னியில் மிகப்பெரும் மனித அவலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தெரிவித்த எல்பின் லிவியட் அது தொடர்பான தனது ஆழ்ந்த கவலையையும் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை அரசிடமிருந்து வெளிப்பட்டுள்ள சில சமிக்ஞைகள் ஏற்கனவே இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசு மேலும் மேலும் இனப்படுகொலைகளை தொடர்வதையே சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை நிலைவரம் குறித்து நாம் அனைவரும் மிகுந்த கவலையடைந்துள்ளோம். ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்றது. அடுத்து வரும் இரண்டு வார காலப்பகுதி இலங்கையில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

இந்நிலையில் அதிகரித்துச் செல்லும் மனிதப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

இவரது கருத்துக்களுக்கு அமைச்சர் டேவிட் மிலிபானட் பதிலளிக்கையில்,

இலங்கை நிலைவரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எல்பின் லிவியட் கூறிய அனைத்து விடயங்களும் உண்மையானவை. அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றேன். மேலும் இலங்கையில் பயங்கரவாதப் பிரச்சினை உள்ளது என்பதனை எவரும் மறுக்கவில்லை. இலங்கையில் பயங்கரவாதம் சகல சமூகங்களுக்கும் அச்சுறுத்தல் மிகுந்த ஒன்று என்றாலும், பயங்கரவாதத்திற்கான தீர்மானத்தின் மூலம் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளை விலையாக பெற்றுக்கொள்ள முடியாது.

அதனாலேயே இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் தம்மால் நியமிக்கப்பட்ட சிறப்புத்தூதுவருடன் இணைந்து பணியாற்றுமாறு இலங்கை அரசை ஊக்கப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.