சென்னை திரும்பினார் ரஹ்மான்!- உற்சாக வரவேற்பு

சென்னை: ஆஸ்கர் விருது வென்ற இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முன்னதாக அவர் 28ம் தேதி தான் நாடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு அன்றைய தினம் மிக பிரமாண்டமான வரவேற்பளிக்க திரையுலகமும், அவரது ரசிகர்களும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், கூச்ச சுபாவம் கொண்ட ரஹ்மான் இதைத் தவிர்க்க யாருக்கும் தெரிவிக்காமல் இன்று அதிகாலையிலேயே நாடு திரும்பிவிட்டார்.

துபாய் வழியாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமிரேட்ஸ் நிறுவன விமானம் மூலம் அவர் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

ஆனாலும் அவரது வருகையை தெரிந்து கொண்டுவிட்ட அவரது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் விமான நிலையத்தில் திரண்டுவிட்டனர். அவரது இசைப் பள்ளியின் மாணவ, மாணவிகளும் நள்ளிரவில் திரளாகக் கூடிவிட்டனர்.

விமான நிலையத்தின் வெளியே வந்த அவருக்கு கொட்டு மேளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஏகத்துக்கும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அமைச்சர் பரிதி இளம்வழுதி, இயக்குநர் ஆர்.பார்த்திபன், நடிகர் சிம்பு பலரும் விமான நிலையத்தில் ரகுமானுக்கு வரவேற்பு கொடுக்கக் காத்திருந்தனர். கூட்ட நெரிசலால் அவர்களை எல்லாம் பார்க்கக்கூட முடியவில்லை ரஹ்மானால்.

அங்கு அதிக நேரமும் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே உடனடியாக காரில் ஏறி வீட்டுக்குப் பறந்தார் ரஹ்மான்.

வீட்டில் ரசிகர் வெள்ளம்…:

கோடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அதிகாலை 2.45 மணிக்கு வந்த ரஹ்மானை அங்கும் பெரும் ரசிகர் கூட்டம் சூழ்ந்து கொண்டது.

அங்கு ரஹ்மான் பேசுவதற்காக அவர் வீட்டு முன்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையில் இயக்குனர் ஆர்.பார்த்திபன், நடிகர் சிம்பு, இயக்குனர் ஜெயம் ராஜா உட்பட பலர் நின்றிருந்தனர். டிரம்ஸ் சிவமணி ஒரு மினி இசைக் கச்சேரியே நடத்திவிட்டார்.

ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த நிலையில் காரின் வெளியே தலையை நீட்டி ரசிகர்களுக்கு கையசைத்துச் சென்றார் ரஹ்மான். அவரால் அந்த மேடைக்குக் கூடச் செல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு கூட்டம் அலைமோதியது.

இதையடுத்து கையில் மைக்கை வாங்கிய ரஹ்மான்,

நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். இது ஆரம்பம் தான். விருதுடன் நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் வரவேற்புக்கு மிகுந்த நன்றி.

தயவு செய்து எல்லோரும் போய் தூங்குங்குங்கள். நான் இங்குதான் இருக்கப் போகிறேன், உங்களுக்காக எப்போதும் இசைத்துக் கொண்டிருப்பேன்… நிம்மதியாக தூங்குங்கள்…என்று சொல்லிவிட்டு ரகுமான் வீட்டுக்குள் சென்றார்.

ரஹ்மானை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஹோ என்று உற்சாகத்தில் கத்த, பதிலுக்கு ரஹ்மானும் ஜெய் ஹோ என்றார்.

பேட்டி!..

அவரைச் சந்திக்க, சில நிருபர்கள் அந்த அதிகாலையிலும் வீட்டுக்குள் காத்திருந்தனர். அவர்களிடம் ரஹ்மான் கூறியதாவது:

இந்த இரண்டு விருதுகளையும் நான் இந்தியாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ஒரு தமிழனாக இருந்து ஹாலிவுட் சென்று இந்த விருதை வாங்கி வந்திருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்வதால் மொழி பேதம் பார்ப்பதாக நினைக்காதீர்கள். எனக்கு எல்லா மொழிகளும் ஒன்றுதான்.

ஆஸ்கர் வாங்கி விட்டதால் தொடர்ந்து தமிழில் இசையமைப்பேனா மாட்டேனா என்றெல்லாம் கேட்காதீர்கள். நான் பாலிவுட் சென்றாலும், ஹாலிவுட் சென்றாலும், எப்போதுமே தமிழுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பேன். எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்ப் படங்களுக்கு இசையமைப்பதை நிறுத்த மாட்டேன்.

தமிழ்ப் படங்களும் நிச்சயம் ஒருநாள் ஆஸ்கர் மேடையேறும்… என்றார் ரஹ்மான்.

Source & Thanks : thatstamil.oneindia.in

Leave a Reply

Your email address will not be published.