டீசல் விலை ரூ. 2 குறைகிறது: ஓரிரு நாளில் அரசு அறிவிப்பு

புதுடில்லி: தேர்தல் கால சலுகையாக, டீசல் விலை இரண்டு ரூபாய் குறைக்கப்பட உள்ளது. இரண்டொரு நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால், பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்காது.

டிசம்பர் மாதத்தில் இருந்து லோக்சபா பொதுத் தேர்தல் அறிவிப்பு வரை நான்கு ரூபாய் விலைக் குறைப்பை இரண்டு தவணையாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. தற்போது, டீசல் விலை மேலும் இரண்டு ரூபாய் குறைக்கப்பட உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்தின் போது, இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும், இன்று அல்லது நாளை அமைச்சரவை கூட்டம் நடக்கலாம் என்றும் அவர் கூறினார். டீசல் விலை குறைப்பால், பணவீக்கம் குறையும் என்றும், போக்குவரத்து செலவு, குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை குறையும் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும் பெட்ரோலுக்கு விலைக் குறைப்பு இருக்காது. ஏற்கனவே, இரண்டு தவணைகளில் 10 ரூபாய் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால், இந்த முறை அறிவிப்பு வெளியாகாது என்று கருதப்படுகிறது. டீசல் விற்பனையின் மூலம், அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு ரூ.3.60 லாபம் ஈட்டுகின்றன. பெட்ரோல் விலையில், ஒரு லிட்டருக்கு தற்போது, எட்டு பைசா மட்டுமே லாபம் கிடைக்கிறது. இதுவும் பெட்ரோல் விலை குறைக்காததற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் டீசல் விற்பனையின் மூலம், ஒரு நாளுக்கு ரூ.36 கோடி லாபம் ஈட்டி வருகின்றன. இது, மண்ணெண்ணெய் விற்பனையில் ஒரு நாளில் ஏற்படும் ரூ.24 கோடி, சமையல் காஸ் மூலம் ஒரு நாளுக்கு ஏற்படும் ரூ.ஒன்பது கோடி நஷ்டத்தையும் சரிக்கட்ட உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Source & Thanks : dinamalar

Leave a Reply

Your email address will not be published.