இலங்கை ஊடாக பாகிஸ்தானின் உளவுப்பிரிவு (ஐ.எஸ்.ஐ) தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம்: அமைச்சர் சிதம்பரம் தெரிவிப்பு

பாகிஸ்தானின் புலனாய்வு நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் தமது இரகசிய முகவர்களை ஊடுருவச் செய்யும் அச்சுறுத்தல் உள்ளதாகவும், இதனை முறியடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் உறுதியான அறிக்கைகள் இல்லாத போதிலும் பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் இலங்கையூடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்ற சாத்தியத்தை மறுக்க முடியாது என்றும் கூறினார்.

இதன் காரணமாக இலங்கையிலிருந்து இந்தியா வருவதற்காக விஸாவுக்கு விண்ணப்பிப்போரின் அனைத்து விண்ணப்பங்களும் மிகவும் உன்னிப்பாக பரிசீலிக்கப்படுவதாகவும் கூறினார். இந்திய பாராளுமன்றத்தில் இடம் பெற்ற கேள்வி நேரத்தின்போது விளக்கமளிக்கையிலேயே சிதம்பரம் மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ. ஆனது ஏனைய தென் ஆசிய நாடுகளை அடையக் கூடிய வல்லமையை கொண்டிருப்பது தொடர்பில் நாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

இதன் காரணமாகவே இந்திய விஸாவுக்கு இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் அனைத்து விண்ணப்பங்களும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மும்பாய் தாக்குதல்களுக்கு பின்னர் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள கடற்கரைப் பாதுகாப்பும் குறிப்பிடத்தக்க வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதேவேளை, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான உறவு வலுவடைந்து வருவது தொடர்பில் அரசாங்கம் விழிப்புணர்வுடன் இருக்கிறதா? என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா சபையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் பாகிஸ்தான் உள்ளக சேவை உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ. தென்னிந்திய கரையை முக்கிய இலக்காகக் கொள்ளலாம் என்று கூறியதுடன் மேற்படி விளக்கத்தையும் அளித்தார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.