இராமேசுவரம் மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் கொடூர தாக்குதல்: மூவர் காயம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இராமேசுவரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார். கம்பியால் கொடூரமாக தாக்கியதில் இருவர் காயம் அடைந்தனர்.

இராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குமீன்பிடிக்க சென்றனர். நண்பகல் 1 மணி அளவில் அந்த படகுகள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. அப்போது அந்த பகுதிக்கு ஆயுதம் பொருத்திய 5 அதி நவீன கப்பல்களில் சிங்கள கடற்படையினர் ரோந்து வந்தனர். அவர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறே நெருங்கி மீனவர்களை திரும்பிச்சென்று விடுமாறு எச்சரித்தவாறு வந்தனர்.

இதையடுத்து பயந்துபோன மீனவர்கள் கடலில் வீசிய வலைகளை அவசர அவசரமாக எடுக்க முயன்றனர். ஆனாலும் சிங்கள கடற்படையினர் இராமேசுவரம் மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த கான்ஸ் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் சூசைஅந்தோணி (வயது 28) யின் வலது கையில் குண்டு பாய்ந்து சதையை துளைத்தது. துடிதுடித்த சூசைஅந்தோணியை உடன் இருந்த மீனவர்கள் கிருபை, சிலுவை, ஞானசேகரன் ஆகியோர் படகில் நேற்று இரவு 9 மணி அளவில் இராமேசுவரம் கொண்டு வந்தனர். படுகாயம் அடைந்த சூசைஅந்தோணி சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த அருள்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான படகிலும் சிங்கள கடற்படையினர் இறங்கினர்.

படகில் உறைபனிக்கட்டி உடைப்பதற்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பியை எடுத்து படகு ஓட்டுனர் அருள்பிரகாசத்தின் மகன் ராஜாவை கண்மூடித்தனமாக தாக்கினர். அதோடு கடலில் மீன்பிடிக்க வீசி இருந்த வலைகளையும் வெட்டிவீசி, விலை உயர்ந்த இறால் மீன்கள், கைப்பேரிகளையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர். வலி தாங்க முடியாமல் துடித்த ராஜாவை மீனவர்கள் நிஷாந்த், முருகேசன் மற்றும் 3 பேரும் இராமேசுவரத்திற்கு அழைத்து வந்தனர்.

காயம் அடைந்த ராஜாவை இராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு பின்னர் இராமநாதபுரம் தனியார் மருத்துவ மனைக்குதீவிர சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். மேலும் சிங்கள கடற்படையினரின் தாக்குதலில் முருகன் என்பவரது படகில் இருந்த முத்துலிங்கம் என்பவரும் காயம் அடைந்தார்.

இது குறித்து அருள்பிரகாசம் படகில் இருந்த மீனவர் நிஷாந்த் கூறுகையில் ” இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர். நாங்கள் அவர்களது எச்சரிக்கையால் மீன்பிடிப்பதை உடனே விட்டுவிட்டு புறப்பட்டோம். ஆனால் படகில் இறங்கி ராஜாவை அவர்கள் தாக்கியதோடு எங்களையும் அடித்தனர். நாங்கள் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அவர்கள் தொடர்ந்து தாக்கினர். பின்னர் இலங்கை கடற்படையினர் அங்கிருந்து சென்றதும் நாங்கள் உயிர் தப்பி கரைவந்து சேர்ந்தோம் ” இவ்வாறு அவர் கூறினார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.