வங்கதேச ரைபிள்ஸ் வீரர்கள் திடீர் புரட்சி-மேஜர் ஜெனரல் உள்பட 30 பேர் கொலை

டாக்கா: வங்கதேச ரைபிள்ஸ் படையினர் இன்று திடீர் புரட்சியில் இறங்கினர். சரமாரியாக அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியதில் மேஜர் ஜெனரல் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர். கலகத்தை அடக்க ராணுவம் விரைந்துள்ளது.

வங்கதேச புற ராணுவப் படையான பங்களாதேஷ் ரைபிள்ஸ் படையின் தலைமையகம் தலைநகர் டாக்காவின், பில்கானா பகுதியில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த தலைமையகத்தில் இன்று திடீரென வீரர்கள் புரட்சியில் இறங்கினர்.

வீரர்கள் கைகளில் துப்பாக்கியுடன் சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். சம்பள உயர்வு காரணமாக இந்த கலகம் வெடித்ததாக கூறப்படுகிறது.

சரமாரியான துப்பாக்கிச் சூட்டால் அந்தப் பகுதியே பெரும் பீதியில் ஆழ்ந்தது.

இந்த திடீர் கலகத்தில், பங்களாதேஷ் ரைபிள்ஸின் இயக்குநர் உள்ளிட்ட நான்கு ராணுவ அதிகாரிகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய வீரர்கள், தலைமையகம் அருகில் உள்ள வர்த்தக வளாகத்தைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தலைமையகம் உள்ள பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் வீரர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து தப்பி ஓடினர்.

கலகம் தொடர்பான தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு ராணுவம் அனுப்பப்பட்டது. கலவரத்தை அடக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தற்போது ராணுவம் இறங்கியுள்ளது.

விமானப்படை ஹெலிகாப்டர்களும் அப்பகுதியை முற்றுகையிட்டு வட்டமிட்டுக் கொண்டுள்ளன.

சம்பவம் நடந்த பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படையினர் சீல் வைத்துள்ளனர்.

தலைமையகத்தின் உள்ளே செல்ல ராணுவம் ஆயத்தமாகி வருகிறது. அங்கு இடைவிடாமல் துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணம் இருப்பதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

1971ம் ஆண்டு பிறந்தது வங்கதேசம். அதன் பின்னர் அங்கு ஜனநாயக முறைப்படியான ஆட்சிகளை விட ராணுவப் புரட்சிகளும், ராணுவ ஆட்சிகளும்தான் அதிகம். அங்கு அடிக்கடி புரட்சிகள் வெடிப்பதும், எதிர்ப்புரட்சிகள் நடப்பதும் சகஜமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிய வங்கதேச அரசு அமைந்த பின்னர் வெடித்துள்ள இந்த கலகத்தால் வங்கதேச மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Source & Thanks : aol.in

Leave a Reply

Your email address will not be published.