பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் பரிதாபகரமான நிலையில்

பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறிப்பாகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதுடன், ஒருசில வயதான தாய்மார்கள்,


கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களின் நிலை பரிதாபகரமானதாக உள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இனந்தெரியாத ஆயுததாரிகளால் யாழ்பாணத்திலும் கொழும்பிலும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் சம்பந்தமாக அவர்களின் உறவினர்கள் மூலமாக எமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியின் பணிப்பின் பேரில், அவரின் செயலாளர் இரா. சங்கையர் தலைமையில் கடந்த ஒரு மாதகாலமாக எமது குழுவினர் சில இடங்களைப் பார்வையிட்டுள்ளனர்.

அதன்படி சில தகவல்களும் பெறப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கடந்த 20.02.2009 ம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டு பூசா சிறையில்
உள்ளவர்களையும் பார்வையிட்டு விபரங்களை சேகரித்து வந்துள்ளனர்.

பூசாவில் உள்ளவர்களில் குறிப்பாகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். ஒருசில வயதான தாய்மார்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களின் நிலை பரிதாபகரமானதாகவே காணப்படுகின்றது.

இவ்வாறானவர்களின் விசாரணையை துரிதமாக முடித்து அவர்களை விடுதலை செய்வதற்காக சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென எமது குழுவினர் தலைவர் வீ. ஆனந்தசங்கரியைக் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் பூசாவில் அடைக்கப்பட்டுள்ள ஆண்கள் அனைவரும் அரசியல் தலைவர்கள் மீது
ஆத்திரத்துடனும் வெறுப்புடனும் உள்ளனர். அடிக்கடி பூசாவிற்கு செல்லும் அரசியல்வாதிகள் அவர்களைப் பார்த்துவிட்டு பத்திரிக்கைகளுக்கு வெறும்
அறிக்கைகளை மட்டும் கொடுத்துவிட்டு தமது கடமை முடிந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு செயற்படுவதாகவும் தங்களின் விடுதலையைப்பற்றி எவருமே சிந்திப்பதேயில்லை எனவும் கூறி விசனப்பட்டார்கள்.

எத்தனையோ கொடூரமான கொலைகளை செய்தவர்களும் விலைமதிக்க முடியாத சொத்துக்களையெல்லாம் அழித்தவர்களும் இன்று உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசதி வாய்ப்புகளுடனும் தங்களை ஒரு மிகப் பெரிய ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொணடு பொறுப்பான பதவிகளையும் வகித்துக்கொண்டு; அதி உயர் பாதுகாப்புக்களுடன் வலம்வரும் போது இவர்கள் பாவம் ஏதோ சிறு சிறு குற்றங்களை செய்துவிட்டு சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் சில அப்பாவி மலையகத்து இளைஞர்கள் என்ன செய்கின்றோம் எதற்காக செய்கின்றோம் எனத் தெரியாமல் விளைவுகளைப்பற்றியறியாமல் சிறு சிறு தவறுகளைச்செயதுவிட்டு சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான அப்பாவிகளின் எதிர் காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

எது எப்படியோ இவர்களுக்கெல்லாம் பொது மன்னிப்பு என்றபேரிலாவது நிபந்தனையின் அடிப்படையில் சில பெரியோர்களின் கையில் பொறுப்பினை ஒப்படைத்து விடுதலை செய்ய முயற்சியினை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுமாறு எமது குழு தலைவரைக் கேட்டுக்கொண்டது.

எமது குழுவினரின் அறிக்கைகளையும் கோரிக்கைகளையும் பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்ட எமது தலைவர் வீ. ஆனந்தசங்கரி; மிக விரைவில் ஜனாதிபதயைச் சந்தித்து சிறையில் இருப்பவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்;.

எமது தலைவர்; கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது யாழ்ப்பாண விஜயத்தின் போது எடுத்த நடவடிக்கை காரணமாக குறிப்பிட்ட ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த வெள்ளை வான்களில் ஆட்களை கடத்தல் கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

மேற்படி குழுவினரின் செயற்பாடுகளை உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு எமது தலைவர் எடுத்துச் சென்றதாலேயே இச்சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. சில ஊடகங்கள் எம்முடன் இணைந்து தைரியத்துடன் செயற்பட்டாலே போதும் இவ்வாறான வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.