வானொலி, தூர்தர்ஷனில் 50 சதவீத பணியிடங்கள் காலி

புதுடில்லி : “வேலை வாய்ப்பை உருவாக்குங்கள்’ என்று தூர்தர்ஷன், வானொலி வாயிலாக தனியாருக்கு மத்திய அரசு அடிக்கடி வேண்டுகோள் விடுக்கிறதே ஒழிய, அதன் பொறுப்பில் உள்ள இந்த இரு நிறுவனங்களிலும் 50 சதவீத முக்கிய பணியிடங்களை நிரப்பாமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்து வருகிறது.

பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை அளிக்க நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட எம்.பி.,க்கள் கமிட்டி, சமீபத்தில் பார்லிமென்டில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷன் “டிவி’ நிலையங்களில் முக்கிய பொறுப்புகளை செய்யும் 4,600 பணியிடங்கள், அகில இந்திய வானொலி அலுவலகங்களில் 6,400 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை கிட்டத்தட்ட மொத்த பணியிடங்களில் 50 சதவீதத்தை எட்டும்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 1991ல், இந்திய ஒளிபரப்பு சேவைக்காக தனி அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் கீழ் இந்த இரு தகவல் தொடர்பு நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை நிர்வகிக்க, முக்கிய முடிவுகளை எடுக்க பிரசார் பாரதி அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. அப்போதில் இருந்தே, முக்கிய பொறுப்புகளில் முழுமையாக பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படுவதில்லை. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நியமனம் அப்போது செய்தது தான்; அதற்கு பின் முழு அளவில் நியமனம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக, வருத்தத்தை வெளியிட்ட, பார்லிமென்ட்ரி கமிட்டி,”பிரசார் பாரதியின் 15 பேர் கமிட்டியில் ஒருவர் மட்டும் தான் பெண். பெண்களுக்கு முக்கிய பொறுப்புகளில் இடம் அளிப்பதில் பின்தங்கியிருப்பது வருத்தப்படக்கூடியது. இதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.