ரயிலை தவற விட்ட பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு

கோவை : “ரயில்வே ஊழியர்களின் சேவைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவருக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது. கோவை, ராமநாதபுரம், பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி(70). இவர் பெங்களூரு – கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் இரு டிக்கெட் முன்பதிவு செய்தார். அப்போதே திரும்பி வருவதற்கான டிக்கெட்டும் பெறப்பட்டது.

கடந்த 2008, மே 26ல், கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றபோது, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் என தகவல் பலகை மற்றும் டிஜிட்டல் போர்டில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மூன்றாவது பிளாட்பாரத்தில், “நீலகிரி எக்ஸ்பிரஸ்’ வந்து நின்றது. ஆனாலும், அறிவிப்பு பலகையில் திரும்பத் திரும்ப மூன்றாவது பிளாட்பாரத்தில் கேரளா செல்லும் ரயில் வரும் என தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி அங்கேயே ராமசாமி காத்துக் கொண்டிருந்தார். அப்போது, பிளாட்பாரத்தில் டீ விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர், கேரளா செல்லும் எக்ஸ்பிரஸ் நான்காவது பிளாட்பாரத்தில் நிற்பதாகத் தெரிவித்தார். அவசர, அவசரமாக பெட்டியை எடுத்துக்கொண்டு, உறவினரான சிவகாமி அம்மாளையும் அழைத்துச் செல்வதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்று விட்டது. ராமசாமி மட்டுமல்லாது, பல பயணிகளும் ரயிலை தவற விட்டிருந்தனர். இது குறித்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவிக்கப்பட்டு, அடுத்து வந்த ரயிலில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஏழு மணி நேரம் நின்று கொண்டே பயணம் செய்தனர். இதனால், மன உளைச்சல் ஏற்பட்டதுடன், மொத்தமாக 5,000 ரூபாய் இழப்பும் ஏற்பட்டது. ரயில்வே துறை ஊழியர்களின் சேவைக் குறைபாட்டால் அதிருப்தி அடைந்த ராமசாமி, கோவை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீராமுலு, உறுப்பினர் ரத்தினம், “பாதிக்கப்பட்ட ராமசாமிக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்’ என, ரயில்வே துறைக்கு உத்தரவிட்டனர்.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.