சென்னையில் வீடுகளின் விலையை ரூ.13 லட்சம் வரை குறைத்தது டி.எல்.எஃப்

சென்னை : சென்னையில் கட்டியிருக்கும் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளின் ( ஃபிளாட் ) விலையில் ரூ.13 லட்சம் வரை குறைப்பதாக, இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப்.,அறிவித்திருக்கிறது.


டி.எல்.எஃப்.,இன் அறிவிப்பை தொடர்ந்து மற்ற கட்டுமான நிறுவனங்களும் வீடுகளின் விலையை குறைக்கும் என்று தெரிகிறது. டி.எல்.எஃப்., நிறுவனம், வீடுகளின் விலையை குறைப்பதில் சென்னை மூன்றாவது நகரமாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் பெங்களுரு மற்றும் ஐதராபாத்தில் உள்ள வீடுகளின் விலையை டி.எல்.எஃப்., குறைத்தது. இப்போது சென்னையிலும் விலை குறைப்பது அமல்படுத்தப்படுகிறது. இது தவிர குர்காவ்ன், பஞ்ச்குலா மற்றும் கொச்சியிலும் அவர்கள் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட இருக்கிறார்கள். ‘ குறிப்பிட்ட சில நகரங்களில் கட்டுப்படியான விலையில் வீடுகள் ‘ என்ற திட்டத்தின் கீழ் இவைகள் கட்டப்படுவதாக டி.எல்.எஃப்., <உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் புதிதாக வீடுகள் வாங்க இருப்பவர்களும், ஏற்கனவே வாங்கியவர்களும் இந்த விலை குறைப்பால் பயனடைவார்கள் என்றார் அந்த உயரதிகாரி . சென்னையில் இவர்கள் குடியிருப்பை கட்ட ஆரம்பித்த மார்ச் 2008ல், வீடுகளின் விலையை சதுர அடிக்கு ரூ.2,800 என்று வைத்திருந்தார்கள். ஆனால் அது கட்டி முடிக்கப்பட்டபோது ரூ.3,000 ஆக உயர்ந்து விட்டது. இப்போது அது புது வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,500 ஆகவும், இனிமேல் வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,550 ஆகவும் குறைக்கப்படுகிறது என்று டி.எல்.எஃப்., தெரிவித்திருக்கிறது. இதனால் வீடுகளின் அளவை பொருத்து, வீடு வாங்குபவர்களுக்கு ரூ.3.5 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரை மிச்சமாகும். சென்னையில் டி.எல்.எஃப்., நிறுவனம் மொத்தம் 3,493 வீடுகளை கட்டியிருக்கிறது. அதில் 1,500 வீடுகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கிறது.

Source & Thanks : dinamalar.com

Leave a Reply

Your email address will not be published.