போரை நிறுத்த முடியாது: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அரசு பதில்

போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் விடுத்த வேண்டுகோளை நிராகரிப்பதாக அந்நாட்டின் அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கலாம். ஆனால், அரசாங்கத்துடன் பேச்சுக்கு வரவேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் போரை நிறுத்த வேண்டும் என ஜரோப்பிய ஒன்றியம் விடுத்த வேண்டுகோள் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கருத்துக்கூறிய போதே அமைச்சர் மகிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

போரில் படையினர் வெற்றி பெற்றுள்ளனர். போரின் இறுதி கட்டம் வந்து விட்டது.

இந்நிலையில் போரை நிறுத்துமாறு ஜரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.

புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் விளக்கமளித்த பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல, விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்து சரணடைந்தால் போர் நிறுத்தம் என்ற சொல்லைக்கூட அனைத்துலக நாடுகள் உச்சரிக்க வேண்டிய தேவை இல்லை என்றார்.

Source & Thanks : puthinam.com

Leave a Reply

Your email address will not be published.