பிரணாப் முகர்ஜியின் கொழும்பு பயணம் ரத்து

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) வெளிவிவகார அமைச்சர்களின் 31 வது மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துகொள்ளமாட்டார்.

ஏற்கனவே முகர்ஜி மாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இறுதித் தருணத்தில் அவரது பயணம் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக “எக்கனோமிக் ரைம்ஸ்” தெரிவித்தது.

பயங்கரவாதம்,பொருளாதாரம் நிதிஒத்துழைப்பு போன்ற விவகாரங்களுக்கு சார்க் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் முன்னுரிமை கொடுத்து ஆராயப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் முகர்ஜிக்குப் பதிலாக இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் ஈ அஹமட்டே கலந்துகொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் முகர்ஜி கலந்து கொள்ளாமைக்கு உள்நாட்டு அரசியல் சூழ்நிலையே காரணம் என கருதப்படுகின்றது.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய அரசு தூர விலகி நிற்கும் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் அவர்களின் நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக தமிழக கட்சிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஆர்ப்பாட்டங்களையும் தினமும் முன்னெடுத்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு தமிழக பல கட்சிகளும் பல்வேறு வகையான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் குறிப்பிட்ட நடவடிக்கையை எடுக்குமாறு இறைமையுள்ள மற்றொரு நாட்டிற்கு இந்திய அரசால் வலியுறுத்த முடியாது என்று பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் இந்திய பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பது தமிழக கட்சிகளிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source & Thanks : tamilwin.com

Leave a Reply

Your email address will not be published.