புதுமாத்தளன் மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் இல்லாமல் பலர் மரணம்: டாக்டர் வரதராஜன் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் இயங்கும் தற்காலிக மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களில் மருந்துப் பொருட்கள் இல்லாத காரணத்தினால், சிகிச்சை வழங்க முடியாமல் சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் மூலம் 325 நோயாளர்கள் இன்று திருகோணமலைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்கு கப்பல் வந்து சென்ற பின்னர் கூட எறிகணை தாக்குதல்களால் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொப்புளிப்பான் போன்ற தொற்றுநோய்கள் அங்கு கடுமையாக பரவிவருவதாக கூறியுள்ள டாக்டர் வரதராஜன் அவர்கள், தமக்கு வெளிநோயாளர் பிரிவில் பயன்படுத்தக் கூடிய மிகவும் குறைந்த அளவிலான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், சத்திர சிகிச்சை போன்றவற்றுக்கு பயன்படுத்தும் முக்கிய மருந்துகள் எதுவும் அனுப்பப்படவில்லை என்றும் கூறினார்.

அதேவேளை வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் மத்தியிலும் அம்மை நோய் போன்ற தொற்றுநோய்கள் கடுமையாக பரவியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Source & Thanks : tamilwin

Leave a Reply

Your email address will not be published.