ஈழத் தமிழர் படுகொலைக்கு கண்டனம்: கோட்டையை முற்றுகையிட முயற்சித்த 140 மாணவர்கள் கைது

இலங்கை இனப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிட முயற்சித்த மாணவர்கள் 140 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், சிறிலங்கா படையினருக்கு ஆயுதங்களை வழங்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாகச் சென்றபோது அவர்களைக் காவல்துறையினர் நடுவழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

சேலம் சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக் தலைமையில் பேரணியாகச் சென்ற நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் மன்றோ சிலை அருகில் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாறன் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவி சுதா, செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் செம்புகுமார் உள்ளிட்டோர் இவர்களில் அடங்குவர். அதேபோல் 2 ஆவது அணியாக ஊர்வலம் நடத்திய மேலும் 40 பேர் மன்றோ சிலை அருகே கைது செய்யப்பட்டனர்.

இசைவு பெறாமல் பேரணி நடத்தியதால் மாணவர்களை வழிமறித்துக் கைது செய்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

போராட்டம் குறித்துச் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர் செம்புகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இலங்கையில் நடைபெறும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் தமிழீழ விடுதலை போராட்டத்தை ஏற்பளிப்பு செய்ய வேண்டும்.

விடுதலை புலிகள் மீதான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் வரை மாணவர்களின் போராட்டம் ஓயாது என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இராசமங்கலம் காவல் நிலையம், கொண்டித்தோப்பு சமுதாயக் கூடம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.