போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து தமிழர்களை வெளியேற்ற உதவி; மருத்துவ சேவை வழங்கவும் தயார்: இந்தியா அறிவிப்பு

இலங்கையில் போர் நடைபெறும் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அப்பாவித் தமிழர்களை வெளியேற்ற சிறிலங்கா நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் நடைபெறும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையை ஆய்வு செய்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் போர் பகுதியில் சிக்கியுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான முறையான செயல் திட்டத்தை சிறிலங்கா வகுக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொள்கிறது.

தமிழ் மக்கள் வெளியேறுவதை அனைத்துலக அமைப்புக்கள் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் இதில் அடங்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஸ் புதுடில்லியில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அப்பாவி மக்களை வெளியேற்றும்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் புனிதத் தன்மையை சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும்.

போர் நடைபெறும் பகுதியில் இருந்து மருத்துவ உதவி தேவைப்படும் பலர் ஏற்கெனவே கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இன்னும் அதிக எண்ணிக்கையிலானோர் கடல் வழியாகவும், தரை வழியாகவும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்ய சிறிலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் ஒத்துழைக்க வேண்டும்.

அப்பாவி தமிழ் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு வரவும், அதன் பின்னர் அவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் இடர் உதவிப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ கவனிப்பு போன்ற உதவிகளை வழங்கவும் இந்தியா தயாராக இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மருத்துவ உதவிகள் மற்றும் மருந்துப் பொருட்களை விரைவில் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து சிறிலங்கா அரசுடன் இந்தியா விவாதித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விஷ்ணுபிரகாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source & Thanks : puthinam

Leave a Reply

Your email address will not be published.